ஜாலியன் வாலாபாக் தியாகிகள் அவமதிப்பா? பஞ்சாப் முதல்வருக்கு தேர்தலில் சிக்கல்

தினமலர்  தினமலர்
ஜாலியன் வாலாபாக் தியாகிகள் அவமதிப்பா? பஞ்சாப் முதல்வருக்கு தேர்தலில் சிக்கல்

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் நடத்திய, ஜாலியன் வாலாபாக் படுகொலையின், 100ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி, பஞ்சாப் அரசியலில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகிகளை, பஞ்சாப் முதல்வர், அம்ரீந்தர் சிங் அவமதித்து விட்டார் என, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

கடும் கண்டனம்:


ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு நாள் நிகழ்ச்சியை, பஞ்சாபில் மத்திய அரசு நடத்தியது. இந்த நிகழ்ச்சியில், ஆளும், காங்., கட்சியை சேர்ந்த, முதல்வர் அம்ரீந்தர் சிங் பங்கேற்கவில்லை. அதே நாளில், பஞ்சாபில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சியில், அவர் பங்கேற்றார். இதற்கு, பா.ஜ., கூட்டணியில் உள்ள, எதிர்க்கட்சியான, சிரோன்மணி அகாலிதளம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை, மே, 19ல் நடக்கும் லோக்சபா தேர்தல் பிரசாரமாக, சிரோன்மணி அகாலிதளம் கையில் எடுத்துள்ளது.

அக்கட்சியின், எம்.பி., பல்விந்தர் சிங் பந்தர் கூறியதாவது: ஜாலியன் வாலாபாக் படுகொலையில், உயிர் தியாகம் செய்த இந்தியர்களை, முதல்வர், அம்ரீந்தர் சிங் அவமானப்படுத்தி விட்டார். தேசிய அளவில் நடந்த நிகழ்ச்சியில், மாநில அரசின் முதல்வர் புறக்கணித்தது வருத்தமானது. இதற்கு அவர், மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து, சீக்கிய இனத்தவருக்கு எதிராகவே நடக்கிறது; அம்ரீந்தர் சிங்கும், அதற்கு துணை போகிறார். அரசியல் லாபத்துக்காக, காங்கிரசுடன் கூட்டு சேர்ந்துள்ளார். இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.

அரசியல் அநாகரிகம்:


அம்ரீந்தர் சிங்கும், இதற்கு பதிலடி கொடுத்து உள்ளார். தேசிய அளவில் நடந்த, ஜாலியன் வாலாபாக் தியாகிகள் நினைவு நாளில், சிரோன்மணி அகாலிதளத்தை சேர்ந்த, பாதல் குடும்பத்தை சேர்ந்தவர்கள், பங்கேற்காதது ஏன்? மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள, ஹர்சிம்ரத் கவுர், அகாலி தளம் கட்சியை சேர்ந்த, சுக்பிர்சிங் மற்றும் பிரகாஷ் பாதலும் பங்கேற்கவில்லை. அகாலிதளம் இதற்கு என்ன சொல்ல போகிறது? இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காத பிரதமர், மோடி, எங்களை மட்டும் குற்றஞ்சாட்டுவது அரசியல் அநாகரிகம். இவ்வாறு அவர் கூறி, தேர்தல் பிரசார விவாத பொருளாக, தியாகிகள் நினைவை மாற்றிஉள்ளார்.

- நீரஜ் சர்மா -
சிறப்பு செய்தியாளர்

மூலக்கதை