தீயில் நாசமான பிரான்ஸ் தேவாலயத்தை சீரமைக்க உதவத் தயார்: யுனெஸ்கோ அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தீயில் நாசமான பிரான்ஸ் தேவாலயத்தை சீரமைக்க உதவத் தயார்: யுனெஸ்கோ அறிவிப்பு

பாரீஸ்: தீயில் நாசம் அடைந்த பிரான்சின் புராதன சின்னமான 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் தேவலாயத்தை சீரமைக்க உதவ தயார் என, யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரிய மையத்தின் இயக்குநர் மெக்டில்ட் ரோஸ்லர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம். 200 ஆண்டுகளாக கட்டுமானப் பணி நடந்த இந்த தேவாலயம் 12ம் நூற்றாண்டில் முடிக்கப்பட்டது. உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் பாரீசில் அமைந்திருந்தாலும், நோட்ரே டேம் தேவாலயமே நினைவுச் சின்னமாக போற்றப்பட்டது. 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே டேம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகவும், ஐரோப்பிய கட்டிட கலைக்கு சான்றாகவும் விளங்குகிறது. இதை புனரமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இங்கு நேற்று முன்தினம் இரவு நடந்த தீ விபத்தில் தேவாலயம் நாசமானது. கட்டிடத்திற்கு அழகு சேர்க்கும் உயரமான கோபுரமும் தீயில் கருகி நொறுங்கி விழுந்தது. 15 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தேவாலயத்தை யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையத்தின் இயக்குனர் மெக்டில்ஸ் ரோஸ்லர், நேற்று முன்தினம் பார்வையிட்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘தீயில் சேதமான நோட்ரே டேம் தேவாலயத்துக்கு ஏராளமான மக்கள் வந்தனர். இவர்களின் பெரும்பாலானோர் அதிர்ச்சியில் உறைந்து காணப்பட்டனர். காரணம், இந்த தேவாலயம் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமான புராதன கட்டிடம். உலகின் அடையாள சின்னமாக இது உள்ளது. இங்குள்ள மக்களில் பலர், தங்களின் அடையாளமே பறிபோய் விட்டது போல உணர்ந்துள்ளனர். எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த தேவாலய கூரையில் மூன்றில் இரண்டு பகுதி தீக்கிரையாகி விட்டது. இதை மீண்டும் சீரமைத்து பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு யுனெஸ்கோ கலாசார நிபுணர்கள் துணை நிற்பார்கள்’’ என்றார். தேவாலயத்தை பார்வையிட்ட யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரல் ஆட்ரே அசவ்லே கூறுகையில், ‘கண்ணாடி ஜன்னல்கள், கல் வேலைப்பாடுகள் உட்பட பலவும் சேதம் அடைந்துள்ளன. சேதத்தின் மதிப்பு மிக விரைவாக கணக்கிடப்படும்,’’ என்றார்.போப் நன்றிநோட்ரே டேம் தேவாலய தீயை அணைத்த வீரர்களுக்கு போப் பிரான்சிஸ் விடுத்துள்ள நன்றி அறிவிப்பில், ‘‘பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த தேவாலத்தில் பற்றிய தீயை, தங்கள் உயிரை துச்சமென மதித்து போராடி அணைத்த தீயணைப்பு வீரர்களுக்கு, தேவாலயத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்றார்.

மூலக்கதை