இந்தோனேஷியாவில் தேர்தல் முடிந்தது: அடுத்த அதிபர் யார்?

தினகரன்  தினகரன்
இந்தோனேஷியாவில் தேர்தல் முடிந்தது: அடுத்த அதிபர் யார்?

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில்  அதிபர் தேர்தல், பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள்  ஆர்வத்துடன் வாக்களித்தனர்.உலகின்  3வது மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தோனேஷியாவில் 20 ஆயிரம் எம்பி.க்கள்,  எம்எல்ஏ.களை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும்  அதிபர் தேர்தல் முதன்முறையாக ஒரே நாளில் நடத்தப்பட்டது. இதில் 20 கட்சிகளை  சேர்ந்த 2,45,000 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 30 சதவீதத்தினர்  பெண்கள். மொத்தமுள்ள 26 கோடி மக்கள் தொகையில் 19.2 கோடி பேர்  வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். இவர்களில் 8 கோடி பேர் இளம் வாக்காளர்கள்.  வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள 17,000க்கும் மேற்பட்ட தீவுகளில் 8,09,500  வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.உள்ளூர்  நேரப்படி நேற்று  காலை 7 மணிக்குக் கிழக்கு மாநிலமான பப்புவாவில் வாக்குப்பதிவு  தொடங்கியது. இதில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வாக்களித்தனர். விறுவிறுப்பான வாக்குப் பதிவு உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு சுமத்ரா  தீவில் முடிந்தது. தேர்தல் முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட உள்ளது.  இதற்கிடையே நடத்தப்படும் குயிக் கவுண்ட்ஸ்’ சுற்று முடிவில் யார் அதிபராக  அதிக வாய்ப்புள்ளது என்பது தெரியவரும். இத்தேர்தலில் தற்போதைய அதிபர்  ஜோக்கோ  விடோடோவிற்கும், கடந்த 2014 அதிபர் தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவற விட்ட முன்னாள் தளபதி பிரபோவோ சுபியாண்டோவுக்கும் இடையே கடும்  போட்டி நிலவி வருகிறது.கருத்துக்கணிப்பு முடிவுகள் விடோடோவுக்கு  சாதகமாகவே உள்ளன. பிபிசி, கோம்பஸ் நடத்திய கருத்து கணிப்பில் விடோடோவுக்கு  55 சதவீதமும் சுபியாண்டோவுக்கு 44 சதவீதமும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக  கணிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுகள் நிறைவடைந்த நிலையில், உடனடியாக  வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால்,  அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் மே மாதம் வரை வெளியிடப்படாது என்று  கூறப்படுகிறது.

மூலக்கதை