வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்துள்ள கட்சிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் முதலிடம்: ரூ.670 கோடி டெபாசிட்!

தினகரன்  தினகரன்
வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்துள்ள கட்சிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் முதலிடம்: ரூ.670 கோடி டெபாசிட்!

புதுடெல்லி: அரசியல் கட்சிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியே அதிகளவாக ரூ.670 கோடி ரூபாயை வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த வரவு-செலவு கணக்கு விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், 2018 டிசம்பர் 13ம் தேதி நிலவரப்படி, ஒவ்வொரு கட்சியின் வங்கி இருப்புத்தொகை எவ்வளவு என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலிடத்தில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி, தலைநகர் மண்டலத்தில் உள்ள 8 பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில் கணக்கு வைத்துள்ளதாகவும், அவற்றில் மொத்தம் 669 கோடி ரூபாய் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், 95.54 லட்ச ரூபாய் ரொக்கமாகக் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த கட்சி 665 கோடி ரூபாயை கையிருப்பு வைத்திருந்தது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 2வது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு வங்கிகளில் ரூ.471 கோடி கையிருப்பு உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலைத் தொடர்ந்து அக்கட்சியின் வங்கி இருப்பில் 11 கோடி ரூபாய் அளவுக்குக் குறைந்துபோயுள்ளது. இந்த நிலையில், 196 கோடி ரூபாயுடன் 3வது இடத்தில் காங்கிரஸ் கட்சியும், 107 கோடி ரூபாயுடன் தெலுங்கு தேசம் கட்சி 4வது இடத்திலும் உள்ளன. பாஜகவின் வங்கி கணக்குகளில் 83 கோடி ரூபாய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-18ம் ஆண்டில் 1,027 கோடி ரூபாய் நிதி திரட்டியதாகவும், அதில் 758 கோடி ரூபாயைச் செலவழித்துவிட்டதாகவும் கூறியுள்ளது. இதனடிப்படையில் பார்த்தால், மேற்கூறிய காலகட்டத்தில் மிக அதிகமாகச் செலவழித்த கட்சியாக பா.ஜ.க திகழ்கிறது. பா.ஜ.கவுக்கு அடுத்தபடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை தலா 3 கோடி ரூபாயை வங்கிக் கணக்கில் இருப்பு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் வருவாயில் சுமார் 87% நன்கொடை மூலமே பெறப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை