எனது காது சவ்வு கிழியும் என்பதா? நாகரீகம் இல்லாமல் விமர்சித்தால் அரசியல் வாழ்வு கிழிந்து தொங்கிவிடும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
எனது காது சவ்வு கிழியும் என்பதா? நாகரீகம் இல்லாமல் விமர்சித்தால் அரசியல் வாழ்வு கிழிந்து தொங்கிவிடும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சேலம்: நாகரீகம் இல்லாமல் விமர்சித்தால் அரசியல் வாழ்வு கிழிந்து தொங்கி விடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு. க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரியில், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொமதேக வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

அப்போது, அவர் பேசியதாவது: எடப்பாடி பழனிசாமி காதில் எதையோ மாட்டிக்கொண்டு, தன்னை எம்ஜிஆர் என்று நினைத்துக்கொண்டு வேனில் வலம் வருகிறார். தன்னை ஒரு விவசாயி என்று கூறும் அவர், விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்கவோ, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவரது ஆட்சியில் விவசாயிகள் செத்து கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர் விவசாயி அல்ல.

விஷவாயு என்று கூறுகிறேன். அதேபோல், கொடநாடு கொலை, கொள்ளை பற்றியும் தொடர்ந்து பேசுகிறேன்.



இதை பொறுக்காத எடப்பாடி, எனக்கு நாவடக்கம் தேவை எனக்கூறுகிறார். எனது காது சவ்வு கிழிந்து விடும் என்று கூறுகிறார்.

இப்படியே தொடர்ந்து பேசினால், உங்கள் அரசியல் வாழ்வு கிழிந்து தொங்கிவிடும் என்று எச்சரிக்கிறேன். விவசாயி என்று கூறிக்கொள்ளும் எடப்பாடிக்கும், பிரதமர் மோடிக்கும் விவசாயிகள் குறித்த சிந்தனை இல்லை.

இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் வரும் 18ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். நாம் பெறும் வெற்றியானது எடப்பாடியை ஒரு நொடி கூட ஆட்சியில் இருக்க விடாது.

திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை ஹீரோ, காங்கிரசின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ. ஆனால், மோடி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஜீரோ.

நீட்டை ரத்து செய்வோம் என்று அதிமுக கூறுகிறது.

ஆனால், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக தமிழில் நீட் தேர்வை கேட்பதாக கூறுகிறார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடியோ அல்லது கூட்டணியில் இருந்து நீட்டை எதிர்க்கும் பாமகவோ வாய் திறக்காதது ஏன்? திமுக தேர்தல் அறிக்கையில், நீட்டை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்துள்ளோம். இதை உறுதிப்படுத்தும் விதமாக, நீட் தேர்வு குறித்து மாநிலங்களே முடிவு செய்யலாம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இப்படி திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஒருமித்த கருத்துடையதாகவும், அதிமுக, பாஜ தேர்தல் அறிக்கை முரண்பட்டதாகவும் உள்ளது. இதை நீங்கள் உணர்ந்து, வரும் 18ம் தேதி உரிய தீர்ப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு மு. க. ஸ்டாலின் பேசினார்.

சர்வாதிகாரி மோடி
நாமக்கல் பொம்மகுட்டைமேட்டில் பிரசார பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது: சர்வாதிகார மனப்பான்மையுடன் மோடி நடந்து கொள்கிறார். அவரது தவறான பொருளாதார கொள்கை காரணமாக, நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்.

அதேபோல், தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உதவாக்கரையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அந்த உதவாக்கரைக்கு பிரதமர் மோடி முட்டு கொடுத்து வருகிறார்.
மோடி தன்னை நாட்டின் காவலாளி என கூறிவருகிறார்.

ஆனால், அவர் ஊழலுக்கும், கொள்ளை கூட்டத்திற்கும் துணை போகும் களவாணியாக இருக்கிறார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ₹650 கோடி விலை கொடுத்து, ஆட்சியில் மீண்டும் அமர்ந்துள்ளனர்.

இதை ஆதாரப்பூர்வமாக வருமான வரித்துறையிடம் இருந்து திரட்டிய தகவலை வைத்து ஒரு ஆங்கில பத்திரிகை எழுதி உள்ளது. இந்த ஆதாரங்கள் எல்லாம், தற்போது பிரதமர் அலுவலகத்தில் இருப்பதாக அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.



இதை வைத்து கொண்டு, பிரதமர் மோடி அதிமுகவை மிரட்டி கூட்டணி வைத்துள்ளார். ஜெயலலிதாவின் மர்ம மரணம், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை, பொள்ளாச்சியில் 7 ஆண்டாக நடந்து வந்த பாலியல் வன்கொடுமை, இந்த 3 அநியாயத்திற்கும் நீதி கிடைக்க வேண்டும்.

இதற்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் மூலம், ஆட்சி மாற்றம் வந்தவுடன் அதன்மூலமாக தமிழகத் திலும் ஆட்சி மாற்றம் வரும். அப்போது, இந்த அக்கிரமங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.

நீட்டை ரத்து செய்வோம் என்று அதிமுக கூறுகிறது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக தமிழில் நீட் தேர்வை கேட்பதாக கூறுகிறார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடியோ அல்லது கூட்டணியில் இருந்து நீட்டை எதிர்க்கும் பாமகவோ வாய் திறக்காதது ஏன்?

.

மூலக்கதை