தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகை : 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகை : 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்

சென்னை : தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழகம் வர உள்ளார். அப்போது, கிருஷ்ணகிரி, திருப்பரங்குன்றம், சேலம், தேனி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்களின் பிரசாரம் சூடிபிடித்துள்ளது.

இந்தநிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் பிரதமர் மோடி கோவையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்தார். ஏற்கனவே, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வந்தார்.

அப்போது, சென்னையில் கல்லூரி மாணவிகள் மத்தியில் அரசியல் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசினார். இது மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து நாகர்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்திலும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இதையடுத்து, ராகுல் காந்தி மீண்டும் தமிழகத்தில் பிரசாரத்திற்கு வருவார் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பிரசார கூட்டங்கள் நடைபெறும் இடங்களை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்துவந்தது. இந்தநிலையில், பிரசார கூட்டங்கள் நடைபெறும் இடம் தேர்வு செய்யப்பட்டு அதன்படி 4 இடங்களில் ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

அதன்படி, நாளை கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். அப்போது, அவர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.நாளை காலை பெங்களூரில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் 10 மணிக்கு கிருஷ்ணகிரி வருகிறார். பின்னர், அங்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் டாக்டர் செல்லக்குமார், விஷ்ணு பிரசாத், நாமக்கல் ஜெயக்குமார் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

அதை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு சேலத்தில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதை தொடர்ந்து, மதியம் 3 மணிக்கு தேனியில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் ஈவிகேஎஸ். இளங்கோவன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

இதையடுத்து மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். ராகுல்காந்தி பங்கேற்கும் இந்த பிரசார பொதுக்கூட்டங்களில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலினும் கலந்து கொள்கிறார்.

ஒரே நாளில் 4 இடங்களில் ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளது காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


.

மூலக்கதை