வயநாட்டில் கம்யூனிஸ்டு வேட்பாளர் வாபஸ் இல்லைடி.ராஜா திட்டவட்டம்

PARIS TAMIL  PARIS TAMIL
வயநாட்டில் கம்யூனிஸ்டு வேட்பாளர் வாபஸ் இல்லைடி.ராஜா திட்டவட்டம்

நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழக்கம்போல உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் போட்டியிடுவதோடு, இந்த முறை கேரள மாநிலம், வயநாட்டிலும் போட்டியிடுகிறார்.
 
இது கேரளாவில் இடதுசாரிகளுக்கு கடுப்பேற்றும் முடிவாக அமைந்துள்ளது.
 
இந்திய கம்யூனிஸ்டு கருத்து

வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “ராகுல் காந்தியை வயநாட்டில் நிறுத்தியதின் மூலம் காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்த நாட்டுக்கு விடுக்கிற செய்தி என்ன?” என கேள்வி எழுப்பினார்.

“வயநாடு தொகுதியில் இருந்து இடதுசாரி வேட்பாளரை திரும்பப்பெறுவது குறித்து பரிசீலிக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியபோது, அதற்கான வழியே இல்லை என்று டி.ராஜா நிராகரித்தார். மேலும், “நாங்கள் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெறப்போவது இல்லை. அவர் முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்” என்று கூறினார்.

‘குறுகிய பார்வை கொண்டது’

தொடர்ந்து அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வயநாட்டில் நிறுத்த எடுத்த முடிவு, குறுகிய பார்வை கொண்டது.

அரசியல் சாசனத்தை, ஜனநாயகத்தை, நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை காப்பாற்றுவதற்கு, அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஓரணியில் நின்று, பாரதீய ஜனதா கட்சியையும், அதன் கூட்டணி கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் முதன்மையான நோக்கம்.

அபத்தம்

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட முடிவு செய்ததில் என்ன பார்வை உள்ளது? காங்கிரஸ் கட்சி எடுத்து வைக்கிற வாதங்கள், கூறுகிற காரணங்கள் ஏற்கத்தக்கதாக இல்லை. அவை அபத்தமானவை.

நாட்டின் ஒற்றுமைக்காக என்று அவர்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால் அவர்கள் காஷ்மீரில் ஒரு தொகுதியை தேர்வு செய்திருக்க வேண்டும் அல்லது லட்சத்தீவில் போட்டியிட்டிருக்க வேண்டும். ராகுல் காந்திக்கு கன்னியாகுமரியை காங்கிரஸ் கட்சி ஏன் தேர்வு செய்யவில்லை? அங்கு பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரை களம் இறக்கி உள்ளதே?

கர்நாடகத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடலாமே, ஏன் அப்படி தேர்வு செய்யவில்லை?

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை