புல்வாமா தாக்குதல் எதிரொலி: ஐபிஎல் டி20 தொடர் தொடக்க விழா ரத்து

தினகரன்  தினகரன்
புல்வாமா தாக்குதல் எதிரொலி: ஐபிஎல் டி20 தொடர் தொடக்க விழா ரத்து

மும்பை: ஐபிஎல் டி20 தொடரின் 2019ம் ஆண்டு சீசனுக்காக தொடக்க விழா ரத்து செய்யப்பட்டு, இந்த விழாவுக்கான தொகை முழுவதும் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியன் சூப்பர் லீக் (ஐபிஎல்) டி20 போட்டித் தொடரின் 12வது சீசன், மார்ச் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. தொடக்க போட்டியில் சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கு முன்பாக வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் பிரம்மாண்டமான தொடக்க விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில், புல்வாமாவில் கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. தீவிரவாதத்துக்கு துணைபோகும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உலக கோப்பையில் அந்நாட்டு அணி பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் கடிதம் எழுதப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நேற்று கூடி தீவிரமாக ஆலோசித்தனர். இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், ஐபிஎல் தொடருக்கான தொடக்க விழா கொண்டாட்டத்தை ரத்து செய்து, அந்த தொகையை வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.

மூலக்கதை