69 சதவீத இடஒதுக்கீடு குறித்து முழு விளக்கம் அளிக்க தயார் : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
69 சதவீத இடஒதுக்கீடு குறித்து முழு விளக்கம் அளிக்க தயார் : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

புதுடெல்லி : தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு, அதனை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பயன்பாடு ஆகியவை தொடர்பான அனைத்து விளக்கங்களையும் அளிக்க தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ‘தமிழக மருத்துவ கலந்தாய்வின் போது 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதால் ஓசி பிரிவை சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதால் அதனை  50 சதவீதமாக குறைக்க வேண்டும்’ என சென்னையை சேர்ந்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் அளித்த உத்தரவில், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை காரணம் காட்டி மருத்துவ சீட்டில் கூடுதல் இடம் கேட்க முடியாது. மேலும் இந்த வழக்கை பொறுத்தமட்டில் தனிப்பட்ட மாணவர்களின் இடஒதுக்கீட்டை பற்றி தான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69 சதவீதத்திற்கு எதிராக மனுவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால் அதற்கு எந்த தடையும் விதிக்க முடியாது.

மேலும் அதற்கான முகாந்திரமும் மனுவில் கிடையாது என தெரிவித்து தள்ளுபடி செய்தது. இருப்பினும் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான மைனர் காயத்ரியின் பிரதான வழக்கை விரைவில் விசாரிப்பதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எந்த தடையும் இல்லை என்பது மீண்டும் உறுதியானது.

இந்த நிலையில் தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் நேற்று  விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “நாடு முழுவதும் 50 சதவீத இடஒதுக்கீடு இருக்கும் போது தமிழகத்தில் மட்டும் தனித்துவமாக 69 சதவீத இடஒதுக்கீடு இருப்பது எப்படி?’’ என கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, மற்றும் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா ஆகியோர் வாதத்தில்,”தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டு வருவது குறித்த அனைத்து விளக்கங்களையும் நாங்கள் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் வழங்கவும், தெரிவிக்கவும் தயாராக உள்ளோம் என தெரிவித்தனர்.

ஆனால் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவபாலமுருகன் வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து நீதிபதிகள்,”தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை வெவ்வேறு தேதிகளில் ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தக் கூடாது.

இதுவே இந்த விவகாரத்தில் கடைசியாக இருக்க வேண்டும். விசாரணையை மார்ச் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்.

அன்றை தினம் இறுதி விசாரணை நடத்தப்படும்’’ என நேற்று உத்தரவிட்டனர்.

.

மூலக்கதை