பாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
பாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு!

பாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால், பின்னால் சேர்த்தாலோ அல்லது தவறாகப் பயன்படுத்துவதாக அறிந்தாலோ விருதுகள் பறிக்கப்படும் என்று மத்திய அரசு  அறிவித்து உள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்து மத்திய உள்துறை இணைஅமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் பேசியதாவது:

''குடிமக்களில் சிறப்பான சேவை செய்தவர்களுக்கு வழங்கப்படும் பாரத ரத்னா, பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் ஆகிய தேசிய விருதுகளை அரசமைப்புச் சட்டம் 18(1)பிரிவின்படி, விருதைப் பெறுபவர்கள் தங்களின் பெயருக்கு முன்னும், பின்னும் பயன்படுத்தக் கூடாது.

அவ்வாறு பயன்படுத்தினாலோ, தவறாகப் பயன்படுத்தினாலோ விருது பெற்றவர்களிடம் இருந்து விருதை அரசிடம் திரும்ப ஒப்படைக்கக் கேட்டுக் கொள்ளப்படுவார்கள். 

மேலும், தவறாகப் பயன்படுத்தியவர்களிடம் இருந்து விருதைப் பறிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. அவர்களின் பெயரையும் அரசின் பதிவேட்டில் இருந்து நீக்க முடியும்.

இந்த விருதைப் பெற்றுக் கொண்டவர்களிடம் இந்த விருது குறித்து பெயருக்கு முன்போ, பின்போ சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்படுவார்கள்.

கடந்த 1955-ம் ஆண்டில் இருந்து இதுவரை 38 பேருக்கு பாரத ரத்னா விருதும், 307 பேருக்குப் பத்ம விபூஷண் விருதும், 1,255 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 3 ஆயிரத்து 5 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு உள்ளது''.

இவ்வாறு ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்தார்.

மூலக்கதை