மோடிக்கு கருப்பு கொடி காட்டியதால் வைகோ காரை பாஜவினர் முற்றுகையிட்டு போராட்டம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மோடிக்கு கருப்பு கொடி காட்டியதால் வைகோ காரை பாஜவினர் முற்றுகையிட்டு போராட்டம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

மீனம்பாக்கம்: மோடிக்கு கருப்பு கொடி காட்டிவிட்டு வைகோ சென்னைக்கு வந்தார். அவர் காரில் புறப்படும்போது, காரை முற்றுகையிட்டு பாஜவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் மோடியின் திருப்பூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு, தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கோவையில் இருந்து நேற்றிரவு 11. 20 மணிக்கு சென்னை வந்தார். அவரை வரவேற்க, இளைஞரணியை சேர்ந்த பாஜவினர் சுமார் 50 பேர், விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

தமிழிசை வந்த விமானத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், பிரதமர் மோடிக்கு திருப்பூரில் கருப்பு  கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு, சென்னை வந்தார். இதை அறிந்த பாஜவினர், வைகோவுக்கு எதிராக போராட்டம் நடத்த தயாரானார்கள்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

விமானம் சென்னை வந்ததும் இறங்கி, வெளியே வந்த வைகோ, நிருபர்களுக்கு பேட்டி அளிக்க முற்பட்டார்.

அப்போது, அங்கிருந்த பாஜவினர், ‘பாரத் மாதா கீ ஜே, மோடி வாழ்க’ என்று கோஷமிட்டனர். உடனே வைகோ, ‘ஆவிதீர கத்தட்டும், நள்ளிரவு 12 மணியை தாண்டினாலும் இதே இடத்தில் நின்று பேட்டி கொடுத்து விட்டுதான் செல்வேன்’ என்றார்.

பாஜவினரும் சிறிது நேரம் கோஷம் போட்டு விட்டு அமைதியானார்கள். கூச்சல் ஓய்ந்ததும், வைகோ ஆவேசமாக பேட்டி அளிக்குபோது, தமிழகத்துக்கு பல துரோகங்களை செய்தவர் பச்சை துரோகி நரேந்திர மோடி.

மேகதாது அணை, காவிரி பிரச்னை, நீட் தேர்வு என்று பல துரோகங்களை செய்தார். கஜா புயலில் 83 தமிழர்கள் உயிரிழந்தபோது, ஒரு அனுதாபம்கூட தெரிவிக்காதவர்.

இப்போது தமிழகத்துக்கு வருகிறார். வேறு எந்த மாநிலத்துக்கும் இதுபோன்று துரோகம் செய்துவிட்டு, அங்கு அவர் சென்றிருந்தால், பற்றிஎரியும்.

ஆனால், தமிழகம் முழு அமைதியை காக்கிறது. மோடி, எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தொடர்ந்து கருப்பு கொடி காட்டுவோம்.

நான், காரில் தனியாக தான் செல்ல போகிறேன். தைரியம் இருந்தால் மறித்து பார்க்கட்டும்.ஏற்கனவே என் பாதுகாப்புக்காக துப்பாக்கி அனுமதி கேட்டு சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், என் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது’ என்று கூறி கூடுதல் கமிஷனர் அனுமதி கொடுக்கவில்லை.

இப்போது கோஷமிடுபவர்கள், தேச பிதா காந்தியையே சுட்டு கொன்ற கோட்சேவின் ஆதரவாளர்கள். கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறுபவர்கள்.

இவர்களை கண்டு எனக்கு பயம் இல்லை. இவர்களுக்கு இந்த தைரியத்தை கொடுப்பது, எடப்பாடி அரசும், போலீசும்தான்’ என்றார்.

இதைத் தொடர்ந்து காரில் ஏறி வைகோ புறப்பட முயன்றார். காரை பாஜவினர் சூழ்ந்து கொண்டு போராட்டம் செய்தனர்.

அவர்களை போலீசார் விலக்கினர். இதையடுத்து வைகோ புறப்பட்டு சென்றார்.

வைகோவின் வெற்று அரசியல் எடுபடாது: தமிழிசை
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த தமிழிசை சவுந்தரராஜன், நிருபர்களிடம் கூறும்போது, ‘மோடி வருகைக்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்ைல.

திருப்பூர் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதை பொறுத்து கொள்ள முடியாததால் இதுபோன்ற செயல்களில் ைவகோ ஈடுபடுகிறார்.

எங்களது இளைஞரணியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை வைகோ ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். அதை கேட்டதற்கு, கூச்சல் குழப்பம் விளைவித்தனர்.

வைகோவின் வெற்று அரசியல் தமிழகத்தில் எடுபடாது.

மோடி, பல நல்ல திட்டங்கள் கொண்டு வருவதை வைகோ எதிர்ப்பது ஏன்? பிரதமர் எங்கு வந்தாலும் கருப்பு கொடி காட்டுவேன் என்று கூறுகிறார்.

அவர் காட்டி பார்க்கட்டும். இப்போதுகூட வைகோவுக்கு கருப்பு கொடி காட்ட பாஜவினர் என்னிடம் அனுமதி கேட்டபோது, ‘அதுபோன்ற அரசியலை செய்ய வேண்டாம்.

நேர்மறையான அரசியல் செய்யுங்கள்’ என்றேன். எங்களுக்கும் கருப்பு கொடி காட்ட தெரியும்.

ஆனால், அதுபோன்ற அரசியல் செய்ய விரும்பவில்லை.

நேர்மறையான அரசியலை செய்து வைகோ போன்றவர்களின் வெற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்றார்.

.

மூலக்கதை