சட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. 

கடந்த மாதம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ பைரசி குறித்து திரைப்படத்துறையினர் தம்மிடம் நீண்ட நாட்களாக முறையிட்டு வருவதாகவும் விரைவில் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்து இருந்தார். 

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பியூஷ் கோயல், திருட்டு விசிடியைத் தடுக்க சட்டவிதிகள் இயற்றப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 1952ஆம் ஆண்டின் திரைப்பட சட்டப்பிரிவை திருத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அனுமதியின்றி திரைப்படங்களை வீடியோ பதிவு செய்வது, பிரதி எடுப்பது ஆகிய குற்றங்களில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையோ, ரூ.10 லட்சம் அபராதமோ அல்லது இரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும்.

இதற்காக சட்டத்திருத்த மசோதா தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு பதப்படுத்தல் தொழில் நுட்ப கல்லூரிக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது

மூலக்கதை