நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

தினகரன்  தினகரன்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

நேப்பியர்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தவான் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக கப்தில், முன்ரோ ஆட்டத்தைத் தொடங்கினர். முகமது ஷமியின் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல் தொடக்கவீரர்கள் கப்தில் 5 ரன்களிலும், முன்ரோ  8 ரன்களிலும் க்ளீன் போல்டாகி வெளியேறினார். தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறியது. 3-வது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லர் களமிறங்கி, கேப்டன் வில்லியம்ஸனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஓரளவுக்கு நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். பின்னர் டெய்லர் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 157  ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 81 பந்துகளில் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார். முகமது ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினர். சஹால் 2 விக்கெட்களையும், ஜாதவ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தொடக்கவீரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆடி ரன்கள் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 41 ஆக உயர்ந்தபோது  ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் தவானுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி சீரான வேகத்தில் ரன்கள் சேர்த்தனர். போட்டியின் நடுவே வெயில் காரணமாக ஆட்டம் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. அங்கு சூரியன் மறையும் நேரத்தில் பேட்ஸ்மேன் முகத்துக்கு நேராக வெயில் பட்டது. இதனால், இந்திய பேட்ஸ்மேன்கள் பந்தை சரியாக பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே கோலியும், தவாணும் தொடர்ந்து பேட் செய்ய சிரமப்பட்டனர். இதன் காரணமாக நடுவர்கள் ஆட்டத்தை 30 நிமிடங்கள் நிறுத்தினர். பின்னர் தொடர்ந்து ஆடிய தவான் 69 பந்தில் தனது 26-வது அரை சதத்தை பதிவு செய்தார். கோலி 59 பந்தில் 45 ரன்கள் எடுத்து பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். 34.5 ஓவரில் இந்தியா வெற்றி இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது. தவான் 75 ரன்களுடனும், ராயுடு 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

மூலக்கதை