இந்திய கலாசாரத்தை சீரழிக்கும் பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்: நாராயணசாமி பேட்டி

தினகரன்  தினகரன்
இந்திய கலாசாரத்தை சீரழிக்கும் பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்: நாராயணசாமி பேட்டி

சென்னை: இந்தியாவின் கலாசாரத்தை சீரழித்து வரும் பாஜ ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதுதான் நோக்கம் என புதுவை முதல்வர் நாராயணசாமி கூறினார். சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டி: வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்களில் பலர், வசதியான பெரிய தொழில் முனைவோர்களாக உள்ளனர். அவர்கள் தமிழ்நாடு மற்றும் புதுவையில் தொழிற்கூடங்களை துவங்க தயார் நிலையில் உள்ளனர். அதற்கான கட்டமைப்பு மற்றும் அவர்களுக்கு அழைப்பு விடுக்க துபாய் மற்றும் அபுதாபி சென்று வந்துள்ளேன்.இந்தியாவில் புதிய மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் உள்ள மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி, பாஜவை நிச்சயமாக வீழ்த்தும். புதிய பிரதமர் யார் என்பது இப்போது முக்கியமல்ல. இந்தியாவின் கலாசாரத்தை சீரழித்து வரும் பாஜ ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதுதான் நோக்கம். இதைத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் வலியுறுத்தி உள்ளார்.தமிழகத்தில் பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைப்பது, தற்கொலைக்கு சமமானது என அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதனால்தான் பிரதமர் மோடி, கூட்டணி கதவை திறந்து வைத்திருக்கிறோம் என அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜவுடன் கூட்டணி வைக்க எந்தவொரு கட்சியும் தயாராக இல்லை. இதனால் கலங்கி போயிருக்கும் பாஜ ஏதேதோ பேசி, மதசார்பற்ற மிகப்பெரிய மகா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கின்றனர். அவர்களின் கனவு பலிக்காது. இவ்வாறு கூறினார்.

மூலக்கதை