உங்களுக்கு தேவையான உதவிகளை காங்கிரஸ் வழங்கும்: துபாயில் இந்திய தொழிலாளர்களின் ராகுல் உறுதி

தினகரன்  தினகரன்
உங்களுக்கு தேவையான உதவிகளை காங்கிரஸ் வழங்கும்: துபாயில் இந்திய தொழிலாளர்களின் ராகுல் உறுதி

துபாய்: துபாயில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டறிந்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஐக்கிய அரபு  அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாள் பயணமாக கடந்த 10-ம் தேதி மாலை துபாய் சென்றடைந்த ராகுல் காந்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாய், அபுதாயில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில்  பங்கேற்றார். இன்றும் ராகுல் காந்தி பங்கேற்கிறார். நேற்று துபாயில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள், இந்திய வம்சாவளியினர், மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது ராகுல் காந்தி, இந்திய தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும்  உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் வழங்கும் என்றும், இதற்கான அறிவிப்பு தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்றார். குடும்பத்தினரைப் பிரிந்து தொழில்நிமித்தமாக துபாயில் வாழும் இந்திய  மக்களுக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்கள் சிலரை அபுதாபியில் ராகுல் சந்தித்து பேசினார். மேலும், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி, இந்திய-அரபு கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அமெரிக்கா,  இங்கிலாந்து, ஜெர்மனி, பக்ரைன் ஆகிய நாடுகளுக்கு ஏற்கனவே சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்குள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை