விஷால் திருமணம் : என்ன குழப்பம்?

தினமலர்  தினமலர்
விஷால் திருமணம் : என்ன குழப்பம்?

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் தென்னிந்த நடிகர் சங்கத்தின் பொதுச் செயலர் என இரு முக்கியப் பதவிகளில் இருந்து கொண்டிருக்கும் நடிகர் விஷாலுக்கு, தேர்தலில் போட்டியிட்டு தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆசையும் அதிகமாக இருக்கிறது. இதற்காகவே, சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையில், இந்தப் பொறுப்புகளில் இருப்பதால் அவருக்கு நிறைய சிக்கல்களும்; எதிரிகளும் உருவாகி உள்ளனர். இருந்த போதும், அவர் தன்னுடைய பணியை வேகமாக செய்து கொண்டிருக்கிறார். சென்னை, தி.நகரில், ஹபிபுல்லா சாலையில் நடிகர் சங்கத்துக்கென பிரமாண்டமான கட்டடத்தைக் கட்டி, அதை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் திறந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அவர், நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை தீவிரமாக காதலிப்பதாகவும்; இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர் என்றெல்லாம் செய்திகள் பரவின. இதற்கிடையில், கடந்த சில வாரங்களாக நடிகர் விஷால், ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் மகள் அனிஷாவை மணக்கப் போவதாக செய்திகள் பரவின. அதை விஷாலின் தந்தையே உறுதி செய்ததாகவும் கூறப்பட்டது. விரைவில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் என்கிற அளவுக்கு செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் திருமணம் பற்ற செய்திகளுக்கு விஷால், மறுப்பு போன்று ஒரு செய்தியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், "என்னுடைய திருமணம் பற்றி தவறான செய்திகள் ஊடகங்களில் கட்டுரைகள் மூலம் பரப்பப்படுவது ஆச்சர்யமாக உள்ளது. இது சரியில்லை. இது என்னுடைய சொந்த வாழ்க்கை; என் திருமணம் பற்றி நானே அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிப்பேன்".

இவ்வாறு விஷால் பதிவிட்டுள்ளார்.

விஷால், திருமண விஷயத்தில் என்னதான் நடக்கிறது என பலரும் குழப்பத்தில் உள்ளனர்.

மூலக்கதை