ஆந்திரா, மேற்கு வங்கத்தை தொடர்ந்து சட்டீஸ்கரில் நுழைய சிபிஐ.க்கு தடை: முதல்வர் பூபேஷ் பாகல் அதிரடி

தினகரன்  தினகரன்
ஆந்திரா, மேற்கு வங்கத்தை தொடர்ந்து சட்டீஸ்கரில் நுழைய சிபிஐ.க்கு தடை: முதல்வர் பூபேஷ் பாகல் அதிரடி

புதுடெல்லி: ஆந்திரா, மேற்கு வங்க மாநிலங்களை தொடர்ந்து, தனது மாநிலத்தில் முன் அனுமதியின்றி சிபிஐ நுழைவதற்கு சட்டீஸ்கர் மாநில அரசும் தடை விதித்துள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்ததை தொடர்ந்து, மோடி தலைமையிலான மத்திய அரசில் இருந்தும், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சி விலகியது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் இக்கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார். தனது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, தெலுங்கு தேசம் கட்சி எம்பி.க்கள், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வழக்கு சம்பந்தமாக மாநில அரசின் முன் அனுமதியின்றி ஆந்திராவுக்குள் சிபிஐ நுழைவதற்கும் சந்திரபாபு நாயுடு தடை விதித்தார்.இது, தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை பின்பற்றி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் சிபிஐ.க்கு தனது மாநிலத்தில் தடை விதித்தார். இந்நிலையில், சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலும் நேற்று இதே நடவடிக்கையை எடுத்தார். வழக்கு விசாரணை, சோதனை போன்றவற்றுக்காக சிபிஐ தனது மாநிலத்துக்குள் நுழையக் கூடாது என தடை விதித்துள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சட்டீஸ்கர் உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், ‘புதிய விவகாரங்களில் சிபிஐ தனது அதிகார வரம்பை சட்டீஸ்கர் மாநிலத்துக்குள் அரசின் முன் அனுமதியின்றி பயன் படுத்தக் கூடாது.சிபிஐ எப்போது வேண்டுமானாலும் தனது மாநிலத்துக்குள் நுழைந்து விசாரணை நடத்த அனுமதி அளித்து, மத்திய அரசுக்கு 2001ம் ஆண்டு அளித்த ஒப்புதல் திரும்பப் பெறப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.இம்மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், தொடர்ந்து ஆட்சி நடத்தி வந்த பாஜ.வை காங்கிரஸ் வீழ்த்தி ஆட்சியை பிடித்தது. இம்மாநில முதல்வராக பூபேஷ் பாகல் நியமிக்கப்பட்டார். அவர் ஆட்சி அமைத்த ஒரு மாதத்துக்குள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

மூலக்கதை