‘சபரிமலையில் நூற்றுக்கணக்கில் இளம்பெண்கள் தரிசனம்’ : அமைச்சரின் பேச்சால் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘சபரிமலையில் நூற்றுக்கணக்கில் இளம்பெண்கள் தரிசனம்’ : அமைச்சரின் பேச்சால் பரபரப்பு

திருவனந்தபுரம் : சபரிமலையில் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் இதுவரை தரிசனம் செய்துள்ளனர் என கேரள மின்துறை அமைச்சர் எம். எம். மணி கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலையில் கடந்த 2ம் தேதி கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து, மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா ஆகிய 2 இளம் பெண்கள் தரிசனம் செய்ததை தொடர்ந்து கேரளாவில் பயங்கர வன்முறை வெடித்தது.

5 நாட்கள் வரை கேரளா முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. 3ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.

இதன்பின்னர் இலங்கையை சேர்ந்த சசிகலா என்ற 47 வயது பெண் தரிசனம் செய்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் கொல்லத்தை சேர்ந்த மஞ்சு என்ற 36 வயது பெண் மூதாட்டி போல் வேடமணிந்து சபரிமலை சென்றதாக கூறி பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டார்.

ஆனால் தேவசம்போர்டோ, கேரள அரசோ இதை உறுதி செய்யவில்லை. இந்நிலையில் மகர விளக்கு பூஜைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மேலும் பல இளம் பெண்கள் தரிசனத்துக்கு வருவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இதை எதிர்ப்போம் என இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம். எம். மணி கொட்டாரக்கரையில் நடந்த விழாவில் பேசியதாவது: சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவை தான் அரசு நிறைவேற்றி வருகிறது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து ஆர். எஸ். எஸ், பா. ஜ மற்றும் இந்து அமைப்பினர் தேவையில்லாத போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சிபிஎம் நினைத்தால் 50 ஆயிரம் இளம்பெண்களை வேண்டுமானாலும் இருமுடி கட்டுடன் சபரிமலைக்கு அழைத்து செல்ல முடியும். அதை தடுக்க யாராலும் முடியாது.

ஆனால் அது சிபிஎம்மின் பணி அல்ல. தரிசனம் செய்ய விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் சபரிமலைக்கு செல்லலாம்.

இதுவரை நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் தரிசனத்துக்கு சென்றுள்ளனர். இனியும் இளம்பெண்கள் தரிசனத்துக்கு செல்வார்கள்.

ஆனால் அதை தடுக்க யாராலும் முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சரின் இந்த பேச்சால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

.

மூலக்கதை