எரிமலை வெடிப்பால் இந்தோனேஷியாவில் சுனாமி: 62 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
எரிமலை வெடிப்பால் இந்தோனேஷியாவில் சுனாமி: 62 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் ஜவா, சுமத்ரா தீவுகளில் இன்று அதிகாலை 2. 30 மணிக்கு திடீரென சுனாமி தாக்கியது. அனாக் கிராகட் பகுதியில் உள்ள மிகப்பெரிய எரிமலை வெடிப்பு, கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம், பவுர்ணமியால் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சுனாமி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 200 கி. மீ தொலைவில் உள்ள அனாக் கிராகட் எரிமலை 305 மீட்டர் உயரம் கொண்டது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து குமுறிக்கொண்டிருந்த எரிமலை தற்போது வெடித்துள்ளது.

இதன் காரணமாகதான் சுனாமி ஏற்பட்டுள்ளது. செராங், பன்டேகிளாங், சவுத் லாம்பங் ஆகிய பகுதிகளில் சுனாமி தாக்கியதில் ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்தன.

சுனாமியால் சுமார் 20 மீட்டர் உயரத்துக்கு அலை எழும்பியது. சுனாமியால், ஜாவா தீவில் உள்ள பான்டென் பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள புகழ்பெற்ற தேசிய பூங்கா, கடற்கரை பகுதிகள் அதிக சேதத்துக்கு ஆளாகியுள்ளன. சுனாமியால் 62 பேர் உயிரிழந்தனர்.

750க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர்.

அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.



சாலைகள் துண்டிக்கப்பட்டதால், போக்குவரத்து முடங்கியது. சுனாமியால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குழுவினர் தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சுனாமி தாக்கிய பகுதியில் பலரை காணவில்லை. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சுனாமி ஏற்பட்ட பகுதியில் இருந்த ஒருவர் கூறுகையில், “கடற்கரை பகுதியில் நின்றுகொண்டு எரிமலை வெடித்ததை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது, திடீரென சுமார் 20 மீட்டர் உயரத்துக்கு கடல் அலை எழும்பியது.

அச்சமடைந்த நான் அங்கிருந்து தப்பி ஓடினேன். ராட்சத அலை கடற்கரை பகுதியில் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது.

அங்கிருந்தவர்களின் உதவியுடன் எனது குடும்பத்தினரை மீட்டேன்’’ என்றார். அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று.

இங்கு கடந்த 2004ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியில் சுமார் 1. 20 லட்சம் பேர் உயிரிழந்தனர். இதற்கான நினைவு தினம் அனுசரிக்க இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில், சுனாமி தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



.

மூலக்கதை