ஆஸி.,-க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : 13 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஆஸி.,க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : 13 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

பெர்த்: ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் வென்ற நிலையில் மழையால் ஒரு போட்டி கைவிடப்பட்டு சமநிலையில் முடிவுற்றது. பின்னர் அடிலெய்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், நாளை அந்நாட்டின் பெர்த்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது. இந்த போட்டியில் விளையாட உள்ள 13 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி, இம்முறை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத காரணத்தால், சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. நாளை துவங்க உள்ள இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா சார்பில் விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில், பிரித்வி ஷா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரோகித் சர்மா ஆகியோருக்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக, ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை