உலக கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா: அரையிறுதியில் நெதர்லாந்து

தினகரன்  தினகரன்
உலக கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா: அரையிறுதியில் நெதர்லாந்து

புவனேஸ்வர்: உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது. ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடித்த அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜெர்மனி அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு முன்னேறின. கடைசி இடம் பிடித்த அணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், 2வது மற்றும் 3வது இடங்களைப் பிடித்த அணிகள் கிராஸ் ஓவர் சுற்றில் மோதின. அதில் நியூசிலாந்து, பாகிஸ்தான், சீனா, கனடா அணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில் இங்கிலாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து அணிகள் கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. லீக் சுற்றில் தென் ஆப்ரிக்காவை 5-0 என்ற கோல் கணக்கிலும், கனடா அணியை 5-1 என்ற கணக்கிலும் வீழ்த்திய இந்தியா, பெல்ஜியம் அணிக்கு எதிராக 2-2 என்ற கணக்கில் டிரா கண்டது. இந்த நிலையில், நெதர்லாந்து அணியுடன் நடக்கும் கால் இறுதி ஆட்டம் இந்திய அணிக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்தது. இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்கிய 4வது கால் இறுதியில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதின. இதில், 1-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் இந்தியா தோல்வியடைந்தது. இதனையடுத்து நெதர்லாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கடந்த 1975ம் ஆண்டு உலக கோப்பை தொடரின் கால் இறுதியில் வென்று அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி சாதனை படைத்தது. அதன் பிறகு 43 ஆண்டுகளாக உலக கோப்பையை முத்தமிட முடியாமல் தவித்து வரும் இந்திய அணி, தற்போது இளமையும் அனுபவமும் கலந்து சிறப்பாக விளையாடி வருவதால் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நெதர்லாந்துடன் மோதியபோது 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்ததும் இந்திய வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ள 105 போட்டிகளில் இந்தியா 33 வெற்றி, 48 தோல்வி கண்டுள்ளது. 24 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. உலக கோப்பையில் நெதர்லாந்து அணியுடன் 6 முறை மோதியுள்ள இந்தியா 5 தோல்வி, ஒரு டிரா கண்டுள்ளது. ஒரு முறை கூட நெதர்லாந்து அணியை வென்றதில்லை என்ற சோக வரலாறு உள்ளது குறிப்பிடத்தக்கது.அரை இறுதியில் இங்கிலாந்து:உலக கோப்பை ஹாக்கி தொடரின் அரை இறுதியில் விளையாட இங்கிலாந்து அணி தகுதி பெற்றது. கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த முதல் கால் இறுதியில் இங்கிலாந்து - அர்ஜென்டினா அணிகள் மோதின. 17வது நிமிடத்தில் கோன்ஸாலோ பெய்லட் அபாரமாக கோல் அடிக்க அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது. பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய இங்கிலாந்து அணிக்கு 27வது நிமிடத்தில் ஜான் மிடில்டன் கோல் அடித்து 1-1 என சமநிலை ஏற்படுத்தினார். தொடர்ந்து 45வது நிமிடத்தில் வில் கால்னன் கோல் போட, இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து அனல் பறந்த ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் கோன்ஸாலோ மீண்டும் கோல் அடிக்க அர்ஜென்டினா 2-2 என சமநிலை ஏற்படுத்தியது. எனினும், அடுத்த நிமிடத்திலேயே இங்கிலாந்தின் ஹாரி ஜான் மார்டின் அபாரமாக கோல் அடித்து அசத்தினார். விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.ஆஸ்திரேலியா முன்னேற்றம்:கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 2வது கால் இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணியுடன் பிரான்ஸ் அணி பலப்பரீட்சையில் இறங்கியது. தொடர்ந்து 3வது முறையாக உலக கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்புடன் உள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்கள், தொடக்கத்தில் இருந்தே பந்தை துடிப்புடன் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தினர். அவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பிரான்ஸ் வீரர்கள் திணறிய நிலையில், 4வது நிமிடத்திலேயே ஆஸி. வீரர் ஜெரிமி ஹேவர்டு கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணிக்கு பிளேக் கோவர்ஸ் 19வது நிமிடத்திலும், ஆரன் ஸேல்வ்ஸ்கி 37வது நிமிடத்திலும் கோல் போட்டு 3-0 என முன்னிலையை அதிகரித்தனர். பிரான்ஸ் வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறியது.

மூலக்கதை