ரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

தினகரன்  தினகரன்
ரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

டெல்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பை வழங்குகிறது.  பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.56 ஆயிரம் கோடியில் 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதலில் பெரியளவில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த முறைகேடு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் எம்எல்.சர்மா, வினீத் தாண்டா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒப்பந்தம் தொடர்பான அனைத்து விவரங்களையும் சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி 3 சீலிடப்பட்ட உறைகளில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், “ரபேல் ஒப்பந்தத்தில் அதிகளவில் முறைகேடு நடந்துள்ளது. அதனால், அது பற்றிய விசாரணையை சிபிஐ.க்கு மாற்ற வேண்டும்’’ என வலிறுத்தினார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ரபேல் தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து பொதுநலன் மனுக்களுமே, ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது குறித்தே கேள்வி எழுப்பியுள்ளன. ஆனால், ‘இந்த போர் விமானம் இந்திய  படைக்கு தேவையா? அது தகுதியானது தானா?’ என யாரும் கேட்க முன் வரவில்லை. மேலும், இந்த வழக்கில் மத்திய அரசின் முடிவு எடுக்கும் நடவடிக்கை மீது மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஒப்பந்தம் இறுதி ஒப்பந்தம் செய்யப்பட்டது தொடர்பான ரகசியங்களை மட்டும் தவிர்த்து விட்டு, மற்ற விவரங்கள் அனைத்தையும்  மக்கள் பார்வைக்காக பொதுதளத்தில் வெளியிட வேண்டும். மேலும், விமானத்தின் உண்மையான விலை, அதை நிர்ணயம் செய்த விதம் ஆகியவை குறித்து அடுத்த 10 நாட்களில் சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கையாக செய்ய வேண்டும்’’ என தெரிவித்தனர். இதனையடுத்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இருதரப்பிலும் காரசாரமாக நடந்த வாதம் நிறைவடைந்ததையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை கடந்த நவம்பர் 14-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில், ரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை காலை 10 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

மூலக்கதை