உலக கோப்பை ஹாக்கி கால் இறுதி நெதர்லாந்திடம் தோற்றது இந்தியா

தினகரன்  தினகரன்
உலக கோப்பை ஹாக்கி கால் இறுதி நெதர்லாந்திடம் தோற்றது இந்தியா

புவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி கால் இறுதிப் போட்டியில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வி அடைந்து ஏமாற்றமளித்தது. புவனேஸ்வரில் நேற்று நடந்த இப்போட்டியில் ஆரம்பத்திலேயே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை கையிலெடுக்க அனல் பறந்தது. தடுப்பாட்டத்திலும் இந்திய அணி வீரர்கள் அசத்தினர். ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை வீணாக்காத ஆகாஷ்தீப், முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இந்திய அணியின் முன்னிலையால் அரங்கே அதிர்ந்தது. ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. 15வது நிமிடத்தில் நெதர்லாந்தின் தியர்ரி பிரிக்மேன் அபார கோல் அடித்து சமன் செய்தார். முதல் கால் மணி நேரம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. 2வது, 3வது கால் மணி நேர ஆட்டங்கள் கோல் ஏதுமின்றி நகர்ந்தன. 4வது மற்றும் கடைசி கால் மணி நேரம் தொடங்கியதும் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. இதில் கோல் அடித்து விட இரு அணிகளும் கடுமையாக போராடின. இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தாலும் நூலிழையில் தவறின. 50வது நிமிடத்தில் நெதர்லாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதில் மிங்க் வான் டெர் வீர்டன் கோல் அடிக்க, இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. 53வது நிமிடத்தில் அமித் ரோகிதாஸ் மஞ்சள் அட்டை பெற்று வெளியேற, இந்திய அணிக்கு மேலும் நெருக்கடி கூடியது. ஆனாலும், 55வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதில் கோல் அடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நெதர்லாந்து கோல் கீப்பர் அபாரமாக செயல்பட்டு தடுத்தார். அடுத்த 5 நிமிடத்தில் மன்பிரீத் சிங் போராடியும் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தர முடியவில்லை. இறுதியில் நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. 43 ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். மற்றொரு கால் இறுதிப் போட்டியில் பெல்ஜியம் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.இன்று அரை இறுதிஇன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் முதல் அரை இறுதியில் இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகளும், மாலை 6.30 மணிக்கு தொடங்கும் 2வது அரை இறுதியில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகளும் மோதுகின்றன. நாளை மறுதினம் இரவு 7 மணிக்கு இறுதிப் போட்டி நடக்க உள்ளது.  

மூலக்கதை