பிரெக்சிட் நடவடிக்கைக்கு எதிராக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இங்கிலாந்து பிரதமர் வெற்றி

தினகரன்  தினகரன்
பிரெக்சிட் நடவடிக்கைக்கு எதிராக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இங்கிலாந்து பிரதமர் வெற்றி

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்நாட்டு பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றுள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக இங்கிலாந்து முடிவு செய்தது. இதுதொடர்பாக அந்நாட்டில் 2016ம் ஆண்டு பொது வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு (பிரெக்சிட்) ஆதரவாக ஏராளமானவர்கள் வாக்களித்தனர். எனினும், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிவதற்கு முன்பாக, அதனுடனான விசா குடியுரிமை தொடர்பாக இரு தரப்பினரும் செய்துக் கொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார். இந்த செயல்திட்ட வரைவு அறிக்கையை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு அமைச்சர்களும்,  எதிர்க்கட்சி எம்.பி.க்களும் எதிர்த்தனர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் நாடாளுமன்றத்திலும் சூடான விவாதம் நடந்தது.பிரெக்சிட் விவகாரத்தில் தெரசா மே நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த சில மூத்த அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், தெரசா மேயை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் ஒரு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில், தெரசா மேக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதான விவாதத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. இதில், மொத்தமுள்ள 317 எம்பிக்களில் 200 பேர் தெரசா மேக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அவர் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் கட்சி தலைவர் பதவியில் நீடிப்பார். பிரதமர் மீது நாடாளுமன்ற கட்சி நம்பிக்கை வைத்திருப்பதையே இந்த வாக்கெடுப்பின் முடிவு காட்டுவதாக கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவர் கிரஹாம் பிராடி தெரிவித்தார். தெரசா மே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்று விட்டதால், இனி ஓராண்டுக்கு அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது.

மூலக்கதை