முறைகேடு தொடர்பாக ரபேல் வழக்கில் இன்று தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் காலை 10.30க்கு அறிவிக்கிறது

தினகரன்  தினகரன்
முறைகேடு தொடர்பாக ரபேல் வழக்கில் இன்று தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் காலை 10.30க்கு அறிவிக்கிறது

புதுடெல்லி: ரபேல் போர் விமானம் முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சய் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்குகளை விசாரித்த அமர்வு விமான விலை தொடர்பான விபரங்களை இணையதளத்தில் வெளியிடாத வரை ரபேல் ஒப்பந்தம் போடப்பட்டது தொடர்பாக எதுவும் விவாதிக்க முடியாது என தெரிவித்தனர். இதையடுத்து ஒப்பந்தம் குறித்த ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில்,”கடந்த 2013ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட விதிகளின் அடிப்படையிலேயே போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் இந்த வழக்கு விவகாரத்தில் மத்திய அரசு அல்லது விமானப்படை அதிகாரி ஒருவர் நேரில் ஆஜராகி ரபேல் ஒப்பந்தம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். விமானத்தில் விலை தொடர்பான விபரங்களை அனைத்து தரப்பினருக்கும் தெரிவிக்கும் விதமாக வெளியிட முடியாது என கூறுவது ஏற்க கூடியது இல்லை என தெரிவித்து ரபேல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க விமானப்படை உயரதிகாரி ஒருவரை அழைத்து வர வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே.வேணுகோபாலுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விமானப்படை அதிகாரிகள் அனில் கோல்சா மற்றும் சவுத்ரி ஆகியோர் நேரில் ஆஜராகி ரபேல் போர் விமானம் குறித்து நீதிபதிகள் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இதையடுத்து சுமார் 4 மணி நேரம் நடந்த வாதங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 14ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.  இந்த நிலையில் ரபேல் போர் விமானம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை 10.30மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. இதில் 5 மாநில தேர்தல் தோல்வியில் இருக்கும் பாஜ அரசு இந்த தீர்ப்பை உற்று நோக்கி எதிர்பார்க்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.

மூலக்கதை