பழைய வீட்டை விற்ற பணத்தில் மனைவி பெயரில் வீடு வாங்கினால் வரிச்சலுகை வராது: தீர்ப்பாயம் அதிரடி

தினகரன்  தினகரன்
பழைய வீட்டை விற்ற பணத்தில் மனைவி பெயரில் வீடு வாங்கினால் வரிச்சலுகை வராது: தீர்ப்பாயம் அதிரடி

புதுடெல்லி: பழைய வீட்டை விற்ற பணத்தில் மனைவி பெயரில் புது வீடு வாங்கியவருக்கு வரிச்சலுகை கிடையாது என தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பழைய வீடு அல்லது பிளாட்டை விற்று விட்டு, அந்த பணத்தில் 2 ஆண்டுக்குள் புதிதாக வீடு அல்லது பிளாட் வாங்கினால் வரிச்சலுகை கிடைக்கும். வருமான வரி சட்டம் பிரிவு 54 இதற்கு வகை செய்கிறது. வாங்கிய காலத்துக்கும் விற்ற காலத்துக்கும் உள்ள பண வீக்க வளர்ச்சி, விலை குறியீடு ஆகியவற்றுக்கு ஏற்ப கணக்கிட்டு 20 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது.  தனது பெயரிலும் தனது மனைவி பெயரிலும் சேர்ந்து வாங்கியிருந்த பழைய பிளாட்டை விற்ற ஒருவர், மனைவி மற்றும் மகள் பெயரில் புதிய பிளாட் வாங்கியுள்ளார். அவருக்கு வரிச்சலுகை கிடைக்கவில்லை. நீண்ட கால மூலதன ஆதாயமாக அவருக்கு கிடைத்திருந்த 50 சதவீத தொகைக்கு கணக்கிட்டு வரி விதித்துள்ளனர். இதுதொடர்பாக மும்பையில் உள்ள வருமானவரி தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனைவி பெயரில் பிளாட் வாங்கிய காரணத்தை காட்டி, வரிச்சலுகை மறுத்தது சரியே என வருமானவரித்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினர் டெல்லி உயர் நீதிமன்றத்திலும், மும்பை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பின்பற்றி இதே போன்று வருமான வரித்துறைக்கு சாதகமான தீர்ப்பை அளித்துள்ளது. வருமான வரி செலுத்துபவர்கள் சொத்து மூலம் வருமான வரிச்சலுகை பெற வேண்டும் என்றால், அவர் தனது பெயரில் சொத்து வாங்கியிருக்க வேண்டும். அவ்வாறு அல்லாமல் மனைவி, மகள் பெயரில் பதிவு செய்திருந்தால் அதன்மீதான வரிச்சலுகையை பெற முடியாது என்கின்றனர் வரி ஆலோகர்கள். அப்படியே மனைவி, மகள், மகன் பெயரில் சொத்து வாங்க விரும்புபவர்கள், தனது பெயரையும் அதில் சேர்த்து பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான், அவர்களுக்கு உரிய பங்கிற்காவது வரிச்சலுகை கிடைக்கும். உதாரணமாக, மனைவி, மகள் பெயரில் பதிவு செய்தவர் தனது பெயரையும் சேர்த்திருந்தால், அதில் 3ல் ஒரு பங்கு சொத்துக்கு அவர் சட்ட ரீதியான உரிமை உடையவர் ஆகிறார். அவரது அந்த பங்குக்கு வரிச்சலுகையை அவர் பெறலாம் என வரி மற்றும் சட்ட ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.* வருமான வரி சட்டம் பிரிவு 54ன்படி, பழைய வீட்டை விற்ற பணத்தில் 2 ஆண்டுக்குள் புது வீடு வாங்க முதலீடு செய்தால் அந்த நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு வரிச்சலுகை கிடைக்கும்.* புதிய வீடு வாங்கும்போது வரி செலுத்துபவர் தனது பெயரில் வாங்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு வரிச்சலுகை கிடைக்க வாய்ப்பு உண்டு.* புதிய வீட்டை மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் மட்டும் வாங்கியிருந்தால், வரிச்சலுகை கிடைக்காது. குறைந்த பட்சம் தனது பெயரையும் அதில் சேர்த்து பதிவு செய்திருந்தால் அவரது பங்குக்கு ஏற்ப வரிச்சலுகை அனுபவிக்கலாம்.

மூலக்கதை