பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

தினகரன்  தினகரன்
பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

பாரீஸ் : வட கிழக்கு பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் குவிந்திருந்த மக்கள் மீது அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 5 பேர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே காயம் அடைந்த 11 பேரில் ஒருவர் சுற்றுலா பயணி என்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய 29 வயது இளைஞரை காவல் துறையினர் துரத்திப் பிடித்தனர். தாக்குதல் நடத்திய நபர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்று தெரியவந்துள்ளது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து கிறிஸ்துமஸ் சந்தையில் உள்ள உணவு விடுதிகள் மூடப்பட்டன. மேலும் விடுதியில் உள்ள வாடிக்கையாளர்களை வெளியே அனுப்ப உணவக நிர்வாகிகள் மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு பயங்கரவாத தாக்குதலா என்பதை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த பகுதியானது ஆண்டுக்கு 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பிரபலமான பகுதியாகும்.  ஆதலால் தற்போது ஸ்ட்ராஸ்பர்க் நகரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு போலீசார் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் சாலைகளில் நடமாட்டத்தை தவிர்க்கவும் பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மூலக்கதை