மியான்மர் அதிபருடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு : 2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

தினகரன்  தினகரன்
மியான்மர் அதிபருடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு : 2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

நய்பிடா : 5 நாள் அரசுமுறை பயணமாக மியான்மர் சென்றுள்ள இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு தலைநகர் நைபியிடாவில் உள்ள அதிபர் மாளிகையில் முப்படை வீரர்கள் மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மியான்மர் அதிபர் யு வின் மியின்டை சந்தித்து மியான்மர்-இந்தியா இடையிலான நல்லுறவு தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையே நீதித்துறை பயிற்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் கூட்டுறவை பலப்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும் சமீபத்தில் கலவர பூமியாக இருந்த ரக்கினே மாகாணத்தில் இந்தியா கட்டித்தந்துள்ள 250 வீடுகள் மியான்மர் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் மியான்மர் வந்து சேர்ந்த பின்னர் உடனடியாக விசா அளிக்கும் சலுகையை மியான்மர் அரசு இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மியான்மர் நாட்டின் ஆளும் கட்சி தலைவரான ஆங் சான் சூகியை சந்தித்த, ராம்நாத் கோவிந்த் மியான்மரின் நாகரீக வரலாற்றில் முக்கிய பங்களிப்பாக இருந்ததற்காக அவருக்கு பாராட்டு கூறினார். மேலும் இருநாட்டு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.

மூலக்கதை