10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்றது. இதன்மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்திய கிரிகெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் இரு அணிகளும் விளையாடிய டி-20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.

இந்நிலையில், 4 டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் தொடங்கியது.  
டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 235 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 15 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 307 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுத்திருந்தது. ஷான் மார்ஷ் 31 ரன், டிராவிஸ் ஹெட் 11 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர்.இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆஸ்திரேலிய அணி 187 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்து தடுமாறியதால், இந்தியா எளிதாக வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆஸ்திரேலிய அணியின் கடைசி வரிசை வீரர்கள் உறுதியுடன் போராட ஆட்டம் விறுவிறுப்பானது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 119. 5 ஓவரில் 291 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்சில் 123 ரன், 2வது இன்னிங்சில் 71 ரன்கள் குவித்த புஜாரா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் மீண்டும் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. கடைசியாக பெர்த் மைதானத்தில் 2008ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்தது.

 

இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடிய டெஸ்ட் தொடர்களில், முதல் டெஸ்டில் வென்றது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலியாவில் 6வது முறையாக இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டுள்ளது.

ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் ஜாக் ரஸ்ஸல், டி வில்லியர்சின் உலக சாதனையை (11 கேட்ச்) இந்தியாவின் ரிஷப் பன்ட் சமன் செய்துள்ளார். அடிலெய்டு டெஸ்டில் மொத்தம் 35 கேட்ச் பிடிக்கப்பட்டன.

இது, உலக சாதனையாக அமைந்தது. முதல் டெஸ்ட்டில் பெற்றிருக்கும் வெற்றி இந்திய அணிக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

2வது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் வருகிற 14ம் தேதி தொடங்குகிறது.

.

மூலக்கதை