இந்திய திரையுலகில் அரைநூற்றான்டு பயணித்த நடிகை ஸ்ரீதேவி காலமானார் !!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இந்திய திரையுலகில் அரைநூற்றான்டு பயணித்த நடிகை ஸ்ரீதேவி காலமானார் !!

தமிழகத்தை சேர்ந்த பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீ தேவி துபாயில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54.
தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழகத்தில், சிவாகாசியிலுள்ள மீனம்பட்டியில் 1963 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி, வழக்கறிஞர் அய்யப்பன் ஐயங்கார்  - ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாக பிறந்தார்.    

கண்ணதாசனால் கிடைத்த முருகர் வேடம் :

ஶ்ரீதேவி, பல படங்களில் முருகன் வேடமிட்டு குழந்தை நட்சத்திரமாக தனது நான்கு வயதில் கலையுலக வாழ்க்கையை ஆரம்பித்தவர் ஶ்ரீதேவி. வழக்கறிஞரான ஶ்ரீதேவியின் தந்தையும் கவிஞர் கண்ணதாசனும் நண்பர்கள், ஒருமுறை குழந்தை ஶ்ரீதேவியை பார்த்துவிட்டு அப்போதைய பெரியத் தயாரிப்பாளாரும் நண்பருமான சின்னப்பத் தேவரிடம் 'தனது  நண்பனின் குழந்தை வேடத்தில் பொருத்தமாக இருப்பாள்' எனக் கண்ணதாசன் கூறியுள்ளார். ஶ்ரீதேவியை பார்த்த நொடியிலேயே 'எனக்கு அந்த முருகபெருமான கண்முன் வந்து நிற்பதுபோல் உள்ளது' எனக் கூறி தமிழில் வெளிவந்த தனது 'துணைவன்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில்  ஶ்ரீதேவி அறிமுகப்படுத்தினார் சாண்டோ சின்னப்ப தேவர்.

அதைத் தொடர்ந்து, கந்தன் கருணை அகத்தியர், குமார சம்பவம் உள்ளிட்ட பல படங்களில் அழகிய முருகன் வேடமணிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி. ஆரின் 'நம் நாடு' படத்தில் குட்டி பத்மினியின் தம்பியாக நடித்திருந்தார். தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த அதே சமயம் தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் பின் விஜயா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவான 'ஜுலி' படம் மூலம் 1975ல் இந்தியிலும் அறிமுகமானார். அந்தநேரத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியானோரை பார்ப்பதரிது.  

1976ல் தனது 13 ஆம் வயதில் இயக்குநர் பாலசந்தரால் 'மூன்று முடிச்சு' படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். கமல், ரஜினி என இருவருடனும் இணைந்து நடித்த முதல் படம்.  தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய கதாநாயகி என்று சொல்லக் கூடிய அளவிற்கு 'மூன்று முடிச்சு' படத்தில் தன்னை முன்னிருத்திக் கொண்டார் ஶ்ரீதேவி. இப்படத்தில் நடித்ததைப் பற்றி ஆங்கில நாளேட்டிற்கு அளித்தப் பேட்டியில் அமரர் பாலசந்தர் குறிப்பிடும்போது "ஶ்ரீதேவி எதையும் எளிதில் கற்றுக் கொள்ளக்கூடியவர் 13 வயதேயான ஶ்ரீதேவி ஒரு 20 வயது பெண்ணுக்கான எமோஷன்களை எளிதாக வெளிக்காட்டினார்" எனக் கூறினார்.

70'களின் மத்தியில் ஆரம்பித்து தான் நடித்து வந்த அனைத்து மொழிகளிலும் தனக்கென ரசிகர்களைக் கொண்டிருந்தார் ஶ்ரீதேவி. இன்றைய சூப்பர்ஸ்டார்கள் கமல், ரஜினியுடன் 16 வயதினிலே படத்தில் 'மயில்' கதாபாத்திரத்தில் இவர் வென்றிடாத நெஞ்சங்களே கிடையாது. கமலுடன் சிகப்பு ரோஜாக்கள், கல்யாணராமன், மீண்டும் கோகிலா உள்ளிட்டப் பல படங்களில் நடித்து வந்தார். பாலு மகேந்திரா இயக்கத்தில் 'மூன்றாம் பிறை' படத்தில் சுய நினைவிழந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்ததை யாரும் மறக்கமுடியாத ஒன்று. ரஜினியுடன் ப்ரியா, காயத்ரி,ஜானி, தர்மயுத்தம் ஆகியப் படங்களில் நடித்து இருக்கிறார். கதாநாயகர்கள் கோலோச்சியக் காலக்கட்டத்தில் தனக்கான கதாபாத்திரங்களை  தேர்வு செய்வதிலும், கிடைக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டு வந்தார் ஶ்ரீதேவி. இன்று பரவலாக பேசப்பட்டு வரும் 'கெமிஸ்ட்ரி' என்ற வார்த்தைக்கு அன்றே இவர்களுடனான படங்களில் அர்த்தம் சொல்லியிருப்பார ஶ்ரீதேவி.  

1986ல் 'நான் அடிமை இல்லை' படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் நடிப்பதை குறைத்து, பாலிவுட்டில் பிசியானார். தமிழ், தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அதிக அளவில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட படங்களில்  நடிக்கத் தொடங்கி பாலிவுட்டில் பெரிய ஹீரோயினாக வலம் வந்தார்.

ரிஷி கபூர், அனில் கபூர், சல்மான் கான், ஷாருக் கான் என 90' களின் டாப் ஸ்டார்களுடனும் நடித்தார். பல இன்னல்கள், சர்சசைகளுக்கு இடையே 1996ஆம் ஆண்டு  பாலிவுட் தயாரிப்பாளரான் போனீ கபூரை காதலித்து  மணந்தார்.

2004ஆம் ஆண்டு மாலினி அய்யர் என்னும் இந்தி தொலைக்காட்சித் தொடரில் நடிக்க ஆரம்பித்த ஶ்ரீதேவி, 2012ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் 'இங்க்லீஷ், விங்க்லீஷ்' படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். தமிழாக்கம் செய்யப்பட்ட இப்படத்தில் ஒரு கதாநாயகியாகவே நடித்தார். இப்படத்தில் அஜித் சிறு கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக தமிழில் விஜய் நடித்த 'புலி' படத்தில் வில்லியாக நடித்திருந்தார். ஸ்ரீதேவியின் நடிப்பில் இந்தியில் கடந்த வருடம் வெளியான மாம் என்ற திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது.

ஆறு பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகள் வாங்கியுள்ளார். 2013ஆம் ஆண்டு இந்திய அரசு ஶ்ரீதேவிக்கு 'பத்மஶ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது. அரை நூற்றாண்டு கால வாழ்க்கையை சினிமாவுக்காக அர்பணித்த மாபெரும் நடிகை ஶ்ரீதேவியை இந்திய திரையுலம் இழந்துள்ளது. அவருடைய இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.

மூலக்கதை