கர்நாடக அணைகளிலிருந்து 53 ஆயிரம் கனஅடி திறப்பு மேட்டூர் அணை ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது

தினகரன்  தினகரன்
கர்நாடக அணைகளிலிருந்து 53 ஆயிரம் கனஅடி திறப்பு மேட்டூர் அணை ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது

பெங்களூரு : கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு  53 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 70 அடியை தாண்டி உள்ளது. தென்மேற்கு  பருவமழையின் காரணமாக கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி  124.80 அடி உயரம் கொண்ட அணையில் 117 அடி தண்ணீர் நிரம்பியது. அணைக்கு  விநாடிக்கு 35 ஆயிரத்து 698 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.  இதுபோல் ஏற்கனவே நிரம்பிவிட்ட கபினி அணைக்கு விநாடிக்கு 50  ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. இதனால், அந்த அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடியும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 53 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை 25 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 32,436 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 65.15 அடியாக இருந்தது, நேற்று மாலை 70.42 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் நீர்மட்டம் 5.27 அடி உயர்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்இருப்பு 31.36 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு வாரத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டி விடும். அப்போது சம்பா சாகுபடிக்காக அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி, சம்பா சாகுபடிக்கு அணை திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 97.68 அடியாக இருந்தது. ஜூலை மாதத்தில், தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டிய தண்ணீர் முழுமையாக வந்து சேர்ந்தால், இம்மாத இறுதியில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டக்கூடும். எனவே, ஒரு போக சம்பா சாகுபடிக்கும், ஆடிப்பெருக்கு விழாவுக்குமாக சேர்த்து இந்த மாத இறுதியில் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.ஒகேனக்கல்லுக்கு 42 ஆயிரம் கனஅடி நீர்வரத்துஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் காலை 30 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 42 ஆயிரம் அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி மற்றும் காவிரியில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை