பாதுகாக்க முடியாவிட்டால் தாஜ்மகாலை இடித்து தள்ளுங்கள் : உச்ச நீதிமன்றம் ஆவேசம்

தினகரன்  தினகரன்
பாதுகாக்க முடியாவிட்டால் தாஜ்மகாலை இடித்து தள்ளுங்கள் : உச்ச நீதிமன்றம் ஆவேசம்

புதுடெல்லி:   “வரலாற்று நினைவு சின்னமான தாஜ்மகாலை பாதுகாக்க முடியாவிட்டால் அதை இடித்து தள்ளிவிடுங்கள்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசத்துடன் எச்சரித்தனர். தாஜ்மகாலை பாதுகாப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கூறியதாவது: தாஜ்மகாலை பாதுகாப்பது பற்றி உ.பி அரசுக்கு கவலையில்லை. இதுவரை பாதுகாப்பது தொடர்பான எந்த திட்டத்தையும் சமர்ப்பிக்கவில்லை. தாஜ்மகால் அழகை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள். இல்லையெனில் நீங்கள் விரும்பினால் அதனை இடித்து தள்ளுங்கள். இந்த விவகாரத்தில் மெத்தன போக்கும், அக்கறையின்மையுமே உள்ளது. மாசு பிரச்னையால் தாஜ்மகாலுக்கு ஏற்படும் ஆபத்து பற்றியும், தாஜ்மகால் இந்தியாவின் பெருமை என்பதையும் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் ஏற்கனவே சுட்டிக்காட்டியது. மேலும்,  தாஜ்மகாலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தி இருந்தது. ஆனாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தாஜ்மகாலை பாதுகாக்க எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்கிற விவரங்களை இரண்டு வாரகாலத்திற்குள் சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. வழக்கு வரும் 31ம் தேதியிலிருந்து தினசரி அடிப்படையில் விசாரிக்கப்படும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.

மூலக்கதை