தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் 2 நீதிபதிகள் அமர்விற்கு மாற்றம் : மனித உரிமை ஆணையம் உத்தரவு

தினகரன்  தினகரன்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் 2 நீதிபதிகள் அமர்விற்கு மாற்றம் : மனித உரிமை ஆணையம் உத்தரவு

புதுடெல்லி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி அமைத்து தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்திற்கு எதிராக வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு குறித்து தேசிய மனித உரிமை ஆணையமே மனுதாரருக்கு இறுதி உத்தரவை பிறக்க வேண்டும் என நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இதை ஏற்ற ஆணையம் 4 அதிகாரிகள் கொண்ட  சிறப்பு புலனாய்வு குழு அமைத்து அறிக்கை பெற்றது. இந்நிலையில், ஆணையம் நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மிக அதிகபடியான மனித உரிமை மீறல்கள் அரங்கேறியுள்ளது. அதனால் இந்த வழக்கை ஆணையத்தின் ஒரு நீதிபதி அமர்வில் இருந்து, 2 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றி அமைக்கப்படுகிறது.  இந்த மாதத்திற்குள்ளாகவே இதுகுறித்த துரித விசாரணை மேற்கொள்ளப்படும். கூடுதல் ஆவணங்களை விரைவில் தமிழக அரசு ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை