ஒரு குடும்பத்தின் நலனுக்காக விவசாயிகளை ஓட்டு வங்கியாக பயன்படுத்தி ஏமாற்றியது காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
ஒரு குடும்பத்தின் நலனுக்காக விவசாயிகளை ஓட்டு வங்கியாக பயன்படுத்தி ஏமாற்றியது காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மாலவுட் : ‘‘ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் நலனை மேம்படுத்துவதற்காக, விவசாயிகளை ஓட்டு வங்கியாக பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி ஏமாற்றியது’’ என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். காரிப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தியது. இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மலாவுட்டில் விவசாயிகள் நல பேரணி நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: விவசாயிகள் நாட்டின் ஆத்மா, அவர்கள்தான் நமக்கு உணவு வழங்குகின்றனர். ஆனால், காங்கிரஸ் எப்போதும் விவசாயிகளை ஏமாற்றி பொய்களை கூறி வந்தது.  விவசாயிகளை ஓட்டு வங்கிகளாக பயன்படுத்தி வந்தது.  இந்த நிலையை மாற்ற தே.ஜ கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக நீங்கள், உணவு தானியங்களை அதிகம் உற்பத்தி செய்து, களஞ்சியங்களை நிரப்பி வருகிறீர்கள். அதற்காக உங்களுக்கு தலை வணங்குகிறேன். பல ஆண்டுகளாக நம்பிக்கை இழந்துள்ளீர்கள். இதற்கு காரணம், கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சியினர் வாழ்க்கைத் தரம் உயர நீங்கள் காரணமாக இருந்தீர்கள். ஆனால், அவர்கள் உங்களின் கடின உழைப்புக்கு அளிக்க வேண்டிய மரியாதையை தரவில்லை. விவசாயிகளுக்கு வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கப்பட்டன. அவர்களுக்கு இருந்த ஒரே கவலை, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை வசதியாக வாழ வைப்பதுதான். இந்த உண்மை நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் பேசினார். ‘வைக்கோலை எரிக்க வேண்டாம்’விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி, ‘‘நான் ஒரு முக்கிய விஷயம் பற்றி இங்கு பேச விரும்புகிறேன். அறுவடை செய்தபின் எஞ்சிய  வைக்கோலை எரிப்பதால் காற்றில் மாசு அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்பிரச்னையை சமாளிக்க பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லிக்கு மத்திய அரசு ரூ.50 கோடி ஓதுக்கியுள்ளது. மொத்த ஒதுக்கீட்டில் பாதிக்கு மேல் பஞ்சாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிலத்தில் உள்ள எஞ்சிய வைக்கோலை அகற்றும் இயந்திரம் வாங்க மத்திய அரசு 50 சதவீத நிதியுதவி அளிக்கிறது. இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். வைக்கோலை முற்றிலும் எரிக்காமல் அப்படியே விடுவதால், உரச் செலவை ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் சேமிக்க முடியும்’’ என்றார்.

மூலக்கதை