ஆண்களுக்கு மட்டுமே தண்டனை அளிக்கும் கள்ளக்காதல் சட்டத்தை ரத்து செய்ய முடியாது : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு

தினகரன்  தினகரன்
ஆண்களுக்கு மட்டுமே தண்டனை அளிக்கும் கள்ளக்காதல் சட்டத்தை ரத்து செய்ய முடியாது : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு

புதுடெல்லி : ‘கள்ளக்காதலில் ஆண்களுக்கு மட்டுமே தண்டனை அளிக்கும் சட்டத்தை ரத்து செய்தால், அது திருமணத்தின் புனிதத்தன்மையை பலவீனப்படுத்தும்’ என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் (ஐபிசி) 497வது பிரிவின்படி, கள்ளக்காதலில் ஈடுபடும் ஆணுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்க முடியும். ஆனால், கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி தண்டிக்கப்பட மாட்டார். இதை எதிர்த்து இத்தாலியில் வசிக்கும் இந்தியர் ஜோசப் சைனி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அதில் அவர், ‘ஒருவர் மற்றொருவரின் மனைவியுடன் அவரின் சம்மதத்துடன் பாலியில் உறவு கொள்ளும்போது ஆண்கள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர். இருதரப்பினர் சம்மதத்துடன் பாலியில் உறவு நடக்கும்போது, அதில் ஒரு தரப்பினரை மட்டும் பொறுப்பிலிருந்து விடுவிப்பது நியாயம் இல்லை’ என கூறியுள்ளார். மேலும், திருமணத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய குற்றவியல் நடைமுறை (சிஆர்பிசி) சட்டத்தின் 198(2)வது பிரிவுக்கு எதிராகவும் அவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, இந்த பொதுநலன் மனுவுக்கு மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதற்கு உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘இந்திய தண்டனை சட்டத்தின் 497வது பிரிவு, திருமணம் என்ற அமைப்பை பாதுகாக்கிறது. இது தொடர்பாக நீதிபதி மாலிமத் கமிட்டி அளித்த அறிக்கையிலும், 497வது சட்டப்பிரிவில் பாலின சமநிலை கொண்டுவர வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. ஐபிசி 497வது பிரிவு, சிஆர்பிசி 198(2)வது பிரிவு ஆகியவற்றை ரத்து செய்தால், திருமணத்தின் புனிதத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்திய பண்பை கெடுக்கும்’ என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை