ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்காக வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு ரூ4,555 கோடி செலவாகும் : சட்ட ஆணையத்திற்கு தேர்தல் ஆணையம் தகவல்

தினகரன்  தினகரன்
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்காக வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு ரூ4,555 கோடி செலவாகும் : சட்ட ஆணையத்திற்கு தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி : நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்க மட்டும் ரூ.4 ஆயிரத்து 555 கோடி செலவாகும் என சட்ட ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். இதற்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் டெல்லியில் கடந்த 7 மற்றும் 8ம் தேதி  சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தியது. ஆனால் இதற்கு அதிமுக, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சுமார் ரூ.4 ஆயிரத்து 555 கோடி செலவாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சட்ட ஆணையத்துக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள தகவலில், ஒரே நாடு, ஒரே தேர்தல் முன்மொழிவு பற்றிய அரசாங்கத்தின் யோசனையால் வாக்குச்சாவடி ஒன்றுக்கு இரண்டு செட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும். மேலும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் கூடுதலாக பல லட்சம் இயந்திரங்கள் வாங்க வேண்டும். அவ்வாறு கூடுதலாக வாங்குவதற்கு சுமார் ரூ.4 ஆயிரத்து 555 கோடியும், அதிக அளவு தேர்தல் அதிகாரிகளும் தேவைப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இதில் பொதுவாக ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை 3 தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு புதிய எந்திரங்கள் வாங்க சில ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். மேலும் வரும் ஆண்டுகளில் ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. எனவே மின்னணு எந்திரங்கள் தேவை அதிகரிப்பால் கூடுதல் செலவாகும். குறிப்பாக 2019ம் ஆண்டிற்கான வாக்குப்பதிவு நிலையங்களில் 14 சதவீதம் அதிகரிப்பு இருப்பதாக ஆணையத்தின் புள்ளிவிரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2024ம் ஆண்டு 12லட்சத்து 19ஆயிரம் வாக்குப்பதிவு நிலையங்கள் அதாவது தற்போதை விட 15 சதவீதம் அதிகரிக்கும். மேலும் 2024ம் ஆண்டு தேர்தலின் போது மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக கூடுதலாக 12 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டியதிருக்கும். அப்போது மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் வாங்குவதற்காக மட்டும் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று சட்ட ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை