உடைந்த தண்டவாளத்துக்கு துணிக்கட்டு போட்டது ஏன்? : மத்திய ரயில்வே பதில்

தினகரன்  தினகரன்
உடைந்த தண்டவாளத்துக்கு துணிக்கட்டு போட்டது ஏன்? : மத்திய ரயில்வே பதில்

மும்பை : ரயில் தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை ரயில்வே ஊழியர்கள் துணியால் கட்டி வைத்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. மும்பையில், ஹார்பர் வழித்தடத்தில் கோவண்டி-மான்கூர்டு இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த அரை மணி நேரத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் சரி செய்யப்பட்டது. ஆனால், விரிசல் ஏற்பட்டிருந்த தண்டவாளத்துக்கு ‘துணிக்கட்டு’ போடப்பட்டிருந்த காட்சியை சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பலர் ரயில்வே ஊழியர்களின் மேதாவித்தனமான செயலை கடுமையாக கிண்டல் செய்திருந்தனர். சிலர் ரயில்வே ஊழியர்களுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலுக்காக துணி கட்டப்படவில்லை. விரிசல் ஏற்பட்ட இடத்தை அடையாளம் காண்பதற்காக அந்த இடத்தில் பெயின்ட் அடிப்பது வழக்கம். மழைக்காலம் என்பதால் பெயின்ட் அழிந்துவிடும் வாய்ப்பு இருப்பதால் அந்த இடத்தில் துணியை கட்டியிருந்தனர். மற்றபடி பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்படவில்லை’’ என்றார். தகவல் உரிமை ஆர்வலரும் ரயில் பயணிகள் உரிமை ஆர்வலருமான சமீர் ஜாவேரி கூறுகையில், ‘‘இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.

மூலக்கதை