இறக்குமதியை குறைத்தால் சலுகை ரத்து சபஹார் துறைமுக முதலீட்டு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : இந்தியா மீது ஈரான் பாய்ச்சல்

தினகரன்  தினகரன்
இறக்குமதியை குறைத்தால் சலுகை ரத்து சபஹார் துறைமுக முதலீட்டு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : இந்தியா மீது ஈரான் பாய்ச்சல்

புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு முதலீடு செய்வதாக அளித்த வாக்குறுதியை இந்தியா நிறைவேற்றவில்லை எனவும், எண்ணெய் இறக்குமதியை குறைத்தால் சிறப்பு சலுகைகளை இந்தியா இழக்க வேண்டியிருக்கும் என ஈரான் கூறியுள்ளது. வர்த்தக நோக்கில் பாகிஸ்தான் துறைமுகத்தை பயன்படுத்தி கொள்ள இந்தியாவுக்கு அனுமதி இல்லை. இதனால் ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்த ஈரானின் சபஹார் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் இந்தியா முதலீடு செய்வதாக உறுதி அளித்திருந்தது. மேலும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்வதில் ஈராக் மற்றும் சவூதி அரேபியாவுக்கு அடுத்ததாக 3வது பெரிய நாடாக ஈரான் இருந்து வந்தது. இந்நிலையில் ஈரானுடன், அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகம் கடந்த 2015ம் ஆண்டு செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை, அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்ப் திரும்ப பெறுவதாக கடந்த மே மாதம் அறிவித்தார். இதையடுத்து இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை படிப்படியாக குறைத்து நவம்பர் 4ம் தேதிக்குள் முற்றிலும் நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா 15.9 சதவீதம் குறைத்தது. இந்நிலையில் ‘சர்வதேச உறவில் எழும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள், இந்திய இருதரப்பு உறவில் ஏற்படும் பாதிப்புகள்’’ என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில் பேசிய ஈரானின் துணை தூதர் மசூத் ரகாஹி, ‘‘சாபர் துறைமுக விரிவாக்கத்தி திட்டத்தில் முதலீடு செய்வதாக இந்தியா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதது துரதிருஷ்டம். முக்கியத்துவம் வாய்ந்த சபஹார்துறைமுகத்தில் ஒத்துழைப்புடன் செயல்பட தேவையான நடவடிக்கையை இந்தியா உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஈரானின் எண்ணெய் இறக்குமதி அளவை குறைத்து சவூதி அரேபியா, ரஷ்யா, ஈராக் மற்றும் அமெரிக்காவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்தால், அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் நிறுத்தப்படும். இந்தியா-ஈரான் இடையேயான உறவை வலுப்படுத்த நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கு வலுவான அரசியல் உறுதி தன்மை தேவை’ என்றார்.

மூலக்கதை