சென்னையின் பாலங்களும்... வீணாகும் காலங்களும்!

தினமலர்  தினமலர்
சென்னையின் பாலங்களும்... வீணாகும் காலங்களும்!

சென்னையின் பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டு, ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டிருப்பது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில், 2012ல், 37.60 லட்சம் வாகனங்களும், 2016ல், 47.57 லட்சம் வாகனங்களும் பதிவு செய்யப்பட்டு, இயங்கி வருகின்றன. தொடரும் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப, ரயில்வே மேம்பாலங்கள், தரைப்பாலங்கள், எஸ்கலேட்டர்கள், நடைமேம்பாலங்கள் ஆகியவற்றின் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

சென்னையின் பல் வேறு இடங்களில், பாலங்கள் அமைக்கும் பணி துவங்கப்பட்டு, ஆண்டுக்கணக்கில் கிடப் பில் போடப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்வதில் சிக்கல், நிலம் கையகப்படுத்துவதில் இழுபறி, கோப்புகளில் கையெழுத்து பெறுவதில் தாமதம், பகுதி மக்களின் தேவைக்கேற்ப திட்டமிடாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இதற்கு கூறப்படுகின்றன.

வேளச்சேரி :

வேளச்சேரி, விஜயநகர் சந்திப்பில், இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட, 108 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2016, பிப்., 13ல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, காணொலி காட்சி மூலமாக, இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். திட்டத்திற்காக, வேளச்சேரி, 100 அடி சாலை, வேளச்சேரி - தரமணி இணைப்புச் சாலை, வேளச்சேரி - தாம்பரம் சாலை ஆகிய மூன்று சாலைகளையும் சேர்த்து, 1,305 ச.மீட்டருக்கு நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது.

பலதுறை அதிகாரிகளுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாட்டால், நிலம் கையகப்படுத்தும் பணியில், தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனால், பாலம் கட்டும் பணியும், ஜவ்வாக இழுக்கிறது.

பட்டாபிராம் :

சென்னை- - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள பட்டாபிராம், எல்.சி.,- - 2 ரயில்வே கேட்டில், 2016ல் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.மொத்தம், 38 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், மூலப்பொருட்கள் விலை உயர்வு என, பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு, ஒரு ஆண்டுக்கு மேலாக, பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

இந்நிலையில், 52.11 கோடி ரூபாய்க்கு மறுமதிப்பீடு செய்யப்பட்டு, 640 மீட்டர் நீளம், 24 மீட்டர் அகலத்தில், 16 துாண்களுடன், ஆறு வழிச்சாலையாக, இரண்டு ஆண்டுகளில், ரயில்வே மேம்பாலம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. திட்டம் துவங்கி, ஓராண்டாக இழுபறியில் இருந்த நிலையில், பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.

அனகாபுத்துார் :

அனகாபுத்துார்- - தரப்பாக்கம் பகுதிகளை இணைக்கும் வகையில், அடையாற்றின் குறுக்கே, 4.70 கோடி ரூபாய் செலவில், 2008ல் மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. மொத்தம், 80 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில், அனகாபுத்துார் பகுதியில் மேம்பாலம் இறங்கும் இடத்தில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான நிலம், 1,000 சதுரடி இடம் கிடைக்காத காரணத்தால், பணிகள் தடைப்பட்டுள்ளன.

மணலி :

மணலி, வார்டு, 16, சடையங்குப்பத்தில், 2010ல், 16 கோடி ரூபாயில், மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. எட்டு ஆண்டுகளாகியும், 60 சதவீதம் பணிகள் கூட நிறைவடையவில்லை. சடையங்குப்பம் மேம் பாலம், ஜோதிநகர் தொடங்கி, மணலி விரைவு சாலை வரையிலான, நிறுவன கட்டடங்களை அகற்றுவதில், அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். 40 ஆண்டுகால மக்களின் கோரிக்கை, எட்டு ஆண்டுகாலமாக இழுபறியில் இருக்கிறது.

தாம்பரம் :

தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கும், ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கும், ஜி.எஸ்.டி., சாலையை கடந்து செல்ல, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 'எஸ்கலேட்டர்' அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு, இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட குழப்பத்தால், இதுவரை வெற்று அறிவிப்பாகவே உள்ளது.

எண்ணுார் :

எண்ணுார் நெடுஞ்சாலை - மணலி சாலையை இணைக்கும் வகையில், ஒருங்கிணைந்த, 'டி' வடிவ மேம்பாலம், 117 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என, 2015, செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது- தற்போது, இந்த திட்டத்திற்கான நிதி, 157 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், மாநில அரசு, 137 கோடி ரூபாயும், மத்திய அரசு, 20 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கி உள்ளன. கட்டுமான பணிக்கான, மண் பரிசோதனை பணிகளும் முடிந்தன. ஆனால், கட்டுமான பணிகள் துவங்கப்படாமல் இழுபறியில் உள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டை :

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, போஜ ராஜன் பகுதியில், 1996ல், போஜராஜன் நகர் சுரங்கப்பாதை அமைக்க, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பல்வேறு நிர்வாக காரணங்களால், இச்சுரங்கபாதை அமைக்கும் பணி, கிடப்பில் போடப்பட்டது.

2010ல், மாநில அரசு, 75 சதவீதம், மத்திய அரசு, 25 சதவீதம் என்ற நிதி அடிப்படையில், 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெற்று, சுரங்கபாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னரும், பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. கடந்த, 22 ஆண்டுகளாக இந்த சுரங்க பாதை திட்டம், கிடப்பில் உள்ளது.

எம்.ஜி.ஆர்., நகர் மார்க்கெட் சாலையில் இருந்து அடையாறு ஆற்றின் குறுக்கே, ஒரு மேம்பாலம் கட்ட, மாநகராட்சி திட்டமிட்டது. அத்திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கைவிடப்பட்டது.

ஆலந்துார் மண்டலம், 162வது வார்டுக்குட்பட்ட, பரங்கிமலை, மேடவாக்கம் பிரதான சாலையில் இருந்து, ஜீவா நகர் பகுதியை இணைக்கும், 30 அடி அகல கால்வாய் மீது, தரைப்பாலம் அமைக்க, 8 ஆண்டுகளாக பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதிகாரி கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

வேகமாக வளர்ச்சி பெறும் ஒரு நகரின் அடையாளங்களாக, மேம் பாலங்கள், சாலை கட்டமைப்புகள் உள்ளன. அதனால் தான், வாகன போக்குவரத்து அதிகரிப்புக்கு ஏற்ப, மேம்பாலம் மற்றும் சாலை கட்டமைப்புக்களை மேம்படுத்த திட்டங்கள் போடப்படுகின்றன. ஆனால், அவற்றை அரசு இயந்திரங்கள் முறையாக செயல்படுத்தாமல், ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடுவதால், மக்களின் அவதி தான் பலமடங்கு அதிகரிக்கிறது.

அண்ணனுார் : ஆவடி அருகே உள்ள அண்ணனுார் ரயில் நிலையத்தில், எல்.சி., -7 ரயில்வே கேட்டில், 2009ல், 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. ரயில்வே துறை சார்பில், உயர்மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட பணிகள், பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில், திட்டம் துவங்கப்பட்டு, 8 ஆண்டுகளுக்கு பிறகு, அடிக்கல் நாட்டு விழா, கடந்த, 4ம் தேதி நடந்தது. ஆனால், இன்னும் பணிகள் துவங்கப்படாததால், 815 மீட்டர் நீளம், 7.5 மீட்டர் அகலத்தில், இருவழிச் சாலையாக உருவாக்க திட்டமிட்ட மேம்பாலம், கனவாகவே உள்ளது.
பல்லாவரம் :பல்லாவரம்- - குன்றத்துார் சாலை, பழைய சந்தை ரோடு, வெட்டர் லைன் ஆகிய, மூன்று சந்திப்பில், 70 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது. இப்பணி, மூன்று கட்டங்களாக நடந்து வருகிறது. இம்மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், ஜி.எஸ்.டி., சாலையில், மூன்று சந்திப்புகளில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறையும். மணல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், பணி மந்தமாக நடந்து வருகிறது.

மதுரவாயல் : மதுரவாயல் - -சென்னை துறைமுகம் வரை, 18.3 கி.மீ., நீளத்திற்கு, 1,850 கோடி ரூபாய் மதிப்பில், பறக்கும் மேம்பாலம் அமைக்க, 2006ல், தி.மு.க., ஆட்சியில் திட்டமிடப்பட்டது. பின், 2007ல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், 2011ல் ஆட்சிக்கு வந்த, அ.தி.மு.க., அரசு, திட்டத்தை ரத்து செய்தது. இதையடுத்து, மதுரவாயல் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மேம்பாலத்திற்காக துாண்கள் அமைக்கப்பட்டு, பணிகள் பாதியில் விடப்பட்டன. இந்நிலையில், கடந்த ஆண்டு, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு, தடையில்லா சான்று வழங்கியது தமிழக அரசு. இதையடுத்து, 6 ஆண்டாக கிடப்பில் இருந்த திட்டத்திற்கு, அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், இன்னும் மேம்பால பணிகள் துவங்கவில்லை.
அறிவிப்புகள் :நெசப்பாக்கத்தில் இருந்து நந்தம்பாக்கம் செல்ல, காணு நகர், 12வது தெருவில் உள்ள காலி இடத்தில் இருந்து, அடையாற்றின் குறுக்கே, 360 கோடி ரூபாய் உத்தேச மதிப்பீட்டில், மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை, ஆறு மாதங்களில் முடிக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆவடி, புதிய ராணுவ சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம், 12 கோடி ரூபாய் மதிப்பிட்டில் விரிவாக்கம் செய்ய, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பெருங்களத்துார் : பெருங்களத்துார் ரயில் நிலையத்தில் உள்ள, இரண்டு ரயில்வே கடவுப்பாதைகளில் ஒன்று, 2015ல் புதிய நடைமேம்பாலம் கட்டுவதற்காக மூடப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான பணிகள் துவங்கப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக, நடைமேம்பாலம் அமைக்கப்படுவதற்கான இத்திட்டம், செயல்வடிவம் பெறாமல் உள்ளது.

குரோம்பேட்டை : குரோம்பேட்டை, ராதா நகர் ரயில்வே கேட்டில், இலகு ரக வாகன சுரங்கபாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு முன், ரயில்வே பகுதியில் பணிகள் நடந்து முடிந்தன. நெடுஞ்சாலைத் துறை பகுதியில், பணி துவங்க வேண்டிய நேரத்தில், இலகு ரக வாகன சுரங்கப் பாலத்திற்கு சாத்தியமில்லை; சுரங்க நடைபாதை மட்டுமே அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு, பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இந்த குளறுபடியால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.



- -நமது நிருபர் குழு- -

மூலக்கதை