வசூலில் பாகுபலி 2வை முந்திய சஞ்சு...

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
வசூலில் பாகுபலி 2வை முந்திய சஞ்சு...

பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் படம் சஞ்சு. ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சஞ்சய் தத் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். மேலும் அவருடன் இந்த படத்தில் ப்ரெஷ் ராவல், மனிஷா கொய்ராலா, அனுஷ்கா சர்மா, சோனம் கபூர், தியா மிர்சா போன்றோரும் நடித்துள்ளார்கள்.

கடந்த வெள்ளியன்று(29.06.2018) வெளியான இந்த படம் இந்திய திரையுலகில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 5300(இந்தியா - 4000 , வெளிநாடுகள் - 1300) திரையரங்குகளில் வெளியான இந்த படம் முதல் நாளன்று இந்தியா முழுக்க ரூ. 34.75 கோடி வசூல் செய்து சாதனை செய்தது. இதற்கு முன்பு இந்த வருடம் வெளியான ரேஸ் 3 படம் முதல் நாளன்று ரூ. 29.17 கோடி வசூல் செய்து சாதனை செய்தது. அந்தச் சாதனையை முறியடித்து 2018-ம் வருடம் முதல் நாளன்று அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை எட்டியுள்ளது இந்த படம்.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன் தினம் இந்தியா முழுக்க சுமார் ரூ. 46.71 கோடியை வசூலித்துள்ளதாம் இந்த படம். இதற்கு முன்பு பாகுபலி 2 படத்தின் ஹிந்திப் பதிப்பு ரூ. 46.50 கோடி வசூலித்ததே இந்தியாவில் ஒருநாளின் அதிகபட்சத் திரைப்பட வசூலாக இருந்தது. அந்தச் சாதனையை சஞ்சு படம் முறியடித்துள்ளது.

அதேபோல முதல் மூன்று நாள்களில், அதாவது வெள்ளி முதல் ஞாயிறு வரை இந்தப் படம் ரூ. 120.06 கோடி வசூலித்தும் சாதனை படைத்துள்ளது. இந்த வருடம் இதுபோல எந்தவொரு இந்தியப் படமும் முதல் மூன்று நாள்களில் இவ்வளவு வசூலைக் கண்டதில்லை. இதற்கு முன்பு ரேஸ் 3 படம், 106.47 கோடி வசூலித்தது, முதல் மூன்று நாள்களில். அந்தச் சாதனையை மிக எளிதாகத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை