ஏர் இந்தியா பங்குகளை விற்கும் முடிவு தள்ளி வைப்பு..!

விகடன்  விகடன்
ஏர் இந்தியா பங்குகளை விற்கும் முடிவு தள்ளி வைப்பு..!

மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கும் விற்கும் முடிவை தள்ளி வைத்துள்ளது. மேலும், ஏர் இந்தியாவை லாபத்தில் இயக்க அதிகளவில் நிதி வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது.  லாப பாதைக்கு கொண்டு வர மத்திய அரசு போதுமான நிதியை வழங்கியும், ஏர் இந்தியா லாபத்தில் இயங்க முடியவில்லை. இதையடுத்து, மத்திய அரசு, ஏர் இந்தியாவின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்தது.  ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம், அதன் ரூ.24,000 கோடி கடனுடன் சேர்த்து வாங்க வேண்டும். 

ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. இதையடுத்து, மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் திட்டத்தை தள்ளி வைப்பதாக தெரிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அமைச்சர் பியூஸ் கோயல், விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் நன்றாக இருக்கிறது. விமானங்கள் அனைத்தும் அதிக பயணிகளுடன் பயணிக்கிறது. நிர்வாக செலவுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விமானப் போக்குவரத்து சேவையையும் மேம்படுத்தப்படும். எனவே, பங்குகளை தனியாருக்கு விற்பதில் தற்போது அவசர பட தேவையில்லை என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்தார்.

பங்குச்சந்தையில் பட்டியல் இடுவதற்கு முன்பாக, ஏர் இந்தியா நிறுவனத்தை லாபத்தில் இயக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. லாப பாதைக்கு திரும்பிய பின்பு, பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிடவும் தி்ட்டமிட்டுள்ளது. பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி விதிமுறைகளின்படி, மூன்று நிதி ஆண்டுகள் தொடர்ந்து  லாபம் ஈட்டிய நிறுவனம்  மட்டுமே பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு அதன் பங்குகளை விற்பனை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை