துப்பாக்கியால் ஐஓபி ஊழியர்களைக் கலங்கடித்த கொள்ளையர்கள்! ரூ.45 லட்சத்துடன் எஸ்கேப்

விகடன்  விகடன்
துப்பாக்கியால் ஐஓபி ஊழியர்களைக் கலங்கடித்த கொள்ளையர்கள்! ரூ.45 லட்சத்துடன் எஸ்கேப்

சென்னையைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் பொதுத்துறை வங்கியின், ஒடிசா கிளையில் ரூ.45 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

ஒடிசா மாநிலம், ரூர்கேலா நகரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. எப்போதும்போல் இன்று காலை திறக்கப்பட்ட வங்கியில், பண பரிவர்த்தனைகள் தொடங்கின. பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரும் வரத்தொடங்கினர். அப்போது, வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள், அதிகாரிகளிடம் துப்பாக்கியைக் காட்டி, ரூ.45 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் வங்கி அதிகாரிகளிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர். விசாரணையில் `ஏழுக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைத்து, அங்குள்ளவர்களிடம் துப்பாக்கியைக் காட்டி, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாக'த் தெரிவித்தனர். 

போலீஸார் கூறுகையில்,`வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள், ஹெல்மெட் அணிந்து சென்றதால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார். 
 

மூலக்கதை