வர்த்தகப் பூசல் எதிரொலி : சென்செக்ஸ், நிஃப்ட்டி சரிவு   

விகடன்  விகடன்
வர்த்தகப் பூசல் எதிரொலி : சென்செக்ஸ், நிஃப்ட்டி சரிவு   

அதிகரித்து வரும் வர்த்தக யுத்தம் குறித்த கவலை காரணமாக, சர்வதேசச் சந்தைகளில் மட்டுமன்றி, இந்தியப் பங்குச் சந்தையிலும் காணப்பட்ட தளர்ச்சியினால், இந்தியப் பங்குகள் இன்று கடுமையான சரிவைக் கண்டன.

மும்பை பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் 261.52 புள்ளிகள் அதாவது 0.74 சதவிகிதம் சரிந்து 35,286.74 என முடிந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்ட்டி குறியீடு 89.40 புள்ளிகள் அதாவது 0.83 சதவிகிதம் நஷ்டத்துடன் 10,710.45-ல் முடிவுற்றது.

டாலருக்கெதிராக ஜப்பானிய யென் பலமடைந்ததின் காரணமாக ஜப்பானியச் சந்தை குறியீடு நிக்கி 225 இன்று கடந்த மூன்று மாதங்களில் காணாத அளவு 1.77 சதவிகிதம் சரிந்து இரண்டரை வார லோ-வில் முடிந்தது.

அமெரிக்காவுடனான வர்த்தகப் பூசல் அதிகரித்து வரும் நிலையில், சீன நாட்டின் சந்தைகளிலும் இன்று கடும் சரிவு இருந்தது. ஹாங் காங் சந்தையின் முக்கியக் குறியீடு ஹாங்-செங் 2.78 சதவிகிதமும், ஷாங்காய் சந்தையின் முக்கியக் குறியீடு ஷாங்காய் காம்போசிட் இன்டெக்ஸ் 3.78 சதவிகிதமும் சரிந்தன.

டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 68.34 என்ற நிலைக்குச் சரிந்ததில், இந்தியச் சந்தையில் முதலீட்டாளர்கள் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது எனலாம்.

இந்தியப் பங்குச் சந்தையில், தகவல் தொழில் நுட்பம், மெட்டல், ஆட்டோமொபைல், ஆயில், பவர் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் பெரும்பாலும் நஷ்டத்தில் முடிந்தன. வங்கி மற்றும் கேப்பிடல் கூட்ஸ் பங்குகளும் தொய்வுடன் இருந்தன. எப்.எம்.சி.ஜி, மருத்துவம் மற்றும் டெலிகாம் துறையில் சில பங்குகள் முன்னேற்றம் கண்டன.

இன்று விலை இறங்கிய பங்குகள் :

வேதாந்தா 3.5%
இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் 3%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பொரேஷன் 3%
பாரத் பெட்ரோலியம் கார்ப்பொரேஷன் 2.3%
யு.பி.எல் 2.6%
மஹிந்திரா & மஹிந்திரா 2.3%
அதானி போர்ட்ஸ் 2.2%
டெக் மஹிந்திரா 2.1%
ஹின்டால்க்கோ, இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, விப்ரோ மற்றும் ஸ்டேட் பேங்க்1.5 முதல் 2 சதவிகிதம் வரை சரிந்தன.

இன்று விலை அதிகரித்த சில பங்குகள் :

பஜாஜ் ஃபைனான்ஸ் 1.2%
கெயில் இந்தியா 1.1%
கண்டைனர் கார்ப்பொரேஷன் 2.9%
மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் 2.75%
கேடிலா ஹெல்த்கேர் 2.5%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1923 பங்குகள் சரிவைக் கண்டன. 703 புள்ளிகள் லாபத்துடனும், 151 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன. 

மூலக்கதை