ஏ.டி.எம் மெஷினில் எலி நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்!- துண்டு துண்டான 12,38,000 ரூபாய்

விகடன்  விகடன்
ஏ.டி.எம் மெஷினில் எலி நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்! துண்டு துண்டான 12,38,000 ரூபாய்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம் மெஷினுக்குள் புகுந்த எலி ஒன்று, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைச் சிறுசிறு துண்டுகளாக கடித்து துவம்சம் செய்துள்ளது. இந்தச் சம்பவம் அசாம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் லாய்புலி பகுதியில் எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குள்ள ஏ.டி.எம். மெஷின் கடந்த மே 20-ம் தேதி முதல் வேலை செய்யாமல் இருந்துள்ளது. ஒரு மாதமாக செயல்படாமல் இருந்த ஏ.டி.எம் மெஷினை சரி செய்ய வேண்டி, வங்கிக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மெஷினைப் பழுதுபார்க்க வங்கி சார்பில் நான்கு வேலை ஆட்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சென்ற அவர்கள் ஏ.டி.எம். மெஷினை டூல் பாக்ஸ் உதவியுடன் திறந்துள்ளனர். அப்போது, மெஷினில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த பணம் அனைத்தும், சிறுசிறு துண்டுகளாக சிதறிக் கிடப்பது தெரியவந்தது. மெஷினுக்குள் எலி ஒன்று புகுந்து இந்த சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதலை நடத்தியது கண்டறியப்பட்டது. இதைப் பார்த்த ஊழியர்கள், வங்கி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

எலி நடத்திய தாக்குதலில் 12,38,000 ரூபாய் மதிப்புள்ள 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் சேதமாகியதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த 19-ம் தேதியன்று ஏ.டி.எம் மெஷினில் 29 லட்சம் ரூபாய் டெபாஷிட் பண்ணியதாக ஏ.டி.எம் மெஷினை பராமரித்து வரும் எப்ஃ.ஐ.எஸ் நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து லாய்புலி போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை