10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியாகும் நிலையில் விடைத்தாள்கள் திடீர் மாயம்!

விகடன்  விகடன்
10ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியாகும் நிலையில் விடைத்தாள்கள் திடீர் மாயம்!

பீகார் மாநிலத்தில் நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில், மெட்ரிக் பள்ளி மாணவர்கள் எழுதிய 200 விடைத்தாள்கள் காணாமல் போனதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

பீகார் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெற்றது. 1,400 தேர்வு மையங்களில் 18 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என பீகார் பள்ளிக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக, 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ம் தேதியன்று வெளியிடப்பட்டது. அதில், தேர்வு எழுதிய மாணவர்கள் சிலருக்கு அவர்கள் எழுதிய தேர்வின் மொத்த மதிப்பெண்ணைக் காட்டிலும், கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், தேர்வுக்கே வராத மாணவர்கள் சிலருக்கு மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது மாணவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் பெறும் சர்ச்சையைக் கிளப்பியது. 

இந்நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், கோபாலன்ஜில் உள்ள எஸ்.எஸ். பாலகிகா இன்டர் பள்ளியில், பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வு எழுதிய 200 மாணவர்களின் விடைத்தாள்கள் கொண்ட பை காணாமல் போனது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளது. போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை