`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்

விகடன்  விகடன்
`சாதி மதம் பார்க்காதீர்கள்..’  பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்

மதத்தைக் காரணம் காட்டி  ஊழியரை இழிவுபடுத்திய வாடிக்கையாளருக்கு ஏர்டெல் நிறுவனம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.


 

பூஜா என்னும் பெண் ட்விட்டர் ஐ.டி-யில் இருந்து ஏர்டெல் டிடிஎச் சேவைக் குறித்து ஒரு புகார் பதிவிடப்பட்டிருந்தது. `அதில் நான் ஏர்டெல் டிடிஎச் மறு இணைப்புக்காக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டேன்.  அப்போது பேசிய ஏர்டெல் வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி என்னிடம் அத்துமீறிப்  பேசினார்’ என்று குற்றம்சாட்டியிருந்தார். 


 

அவரின் புகாருக்கு ஏர்டெல் நிறுவனத்தின் ட்விட்டர் ஐ.டி-யில் இருந்து  பதிலளித்த ஏர்டெல் பிரதிநிதி ஷோயிப்,  `இந்த விஷயத்தை உடனடியாக எங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று கனிவாகப் பதில் அளித்திருந்தார். 

ஷோயிப் ட்வீட்டுக்கு பதிலளித்த பூஜா,  `நீங்கள் இஸ்லாமியர் என்பதால் உங்கள் நேர்மை மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. எனவே, இந்து பிரதிநிதியை நியமிக்கவும்’ என்று பதிவிட்டார்.  உடனே ககன் என்னும் மற்றொரு ஏர்டெல் பிரதிநிதி, `உங்களின் புகாரை விரைவில் விசாரிக்கிறோம்’ என்று பூஜாவுக்குப் பதிலளித்தார்.


 

`மதத்தைக் காரணம் காட்டி வேறு ஒரு பிரதிநிதியை நியமிக்கச் சொன்ன வாடிக்கையாளரை ஏர்டெல் கண்டிக்கவில்லை’ என்று இணையத்தில் பிரளயம் வெடித்தது.  `ஏர்டெல் சேவையில் இருந்து வேறு சேவைக்கு மாறப் போகிறேன்’ என்று பலர் ஏர்டெல் நிறுவனத்தைத் திட்டி தீர்த்தனர்.

கிட்டத்தட்ட 9 மணி நேரம் கழித்து ஏர்டெல் நிறுவனம் பூஜா என்னும் அந்த ஐடி-யை டேக் செய்து  `ஏர்டெல் நிறுவனம், 'சாதி மத அடிப்படையில் ஊழியர்களையும் வாடிக்கையாளரையும்  ஒருபோதும் வேற்றுமைப்படுத்தாது. நீங்களும் சாதி மத வேற்றுமை பார்க்காமல் நடந்துகொள்வதே சரி. ஷோயிப், ககன் இருவருமே எங்கள் பிரதிநிதிகள்தான்’ என்று அந்தப் பெண்ணுக்கு பதிலடி கொடுத்தது.  

`சற்று தாமதமான பதிலடி என்றாலும் தக்க பதிலடி’ என்று ஏர்டெல் நிறுவனத்துக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் இதேபோன்று `ஓலா கார் ஓட்டுநர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், தனது சவாரிக்கான முன்பதிவை ரத்து செய்தவருக்கு ஓலா நிறுவனம் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை