"இறப்பினும் அறம் வெல்லும் அஞ்சற்க!" - சுஜாத் புகாரிக்காக சிந்தப்பட்ட இறுதி கண்ணீர்த்துளி

விகடன்  விகடன்
இறப்பினும் அறம் வெல்லும் அஞ்சற்க!  சுஜாத் புகாரிக்காக சிந்தப்பட்ட இறுதி கண்ணீர்த்துளி

ரு பத்திரிகையாளரின் இறுதிச் சடங்கில் ஏன் இத்தனை பேர் கூடவேண்டும் என்கிற கேள்வி அந்தப் புகைப்படங்களைப் பார்த்ததும் தனிச்சையாக எழுந்தது. கொள்கைகளால் பிரிவுபட்டிருந்த காஷ்மீரின் அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகளும் பலத்த மழைக்கு இடையே சையது சுஜாத் புகாரி குடும்பத்தின் கல்லறைத் தோட்டத்தில் அவரை நல்லடக்கம் செய்யக் கூடியிருந்தார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தங்களின் அமைதியான வாழ்வுக்காக போராடியவரை இறுதியாகப் பார்க்க வந்ததில் ஆச்சரியம் இல்லைதான். சகபத்திரிகையாளர்களே மக்களுக்கான சுஜாத்தின் பங்களிப்பை விவரிக்கிறார்கள்.  

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுவந்த அரசுசாராத நபர்களில் பத்திரிகையாளர் சுஜாத்தும் ஒருவர். அண்மையில் லிஸ்பனில் நடந்த சர்வதேசப் பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டபோது கூட காஷ்மீர் பிரச்னையை முன்னிறுத்தி சர்வதேச கவனத்தை ஈர்த்தார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையும் காஷ்மீர் மக்களுடனான பேச்சுவார்த்தையும் மட்டும்தான் ஒரே தீர்வாக இருக்கும் என்பதில் அவருக்கு ஆழமான நம்பிக்கை இருந்தது. அது மட்டுமே அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பினார். ‘உங்கள் பிரச்னைகளுக்கான தீர்வுக்கு பேச்சுவார்த்தைகள் மட்டுமே துணையாகவும் முழுத் தீர்வு தருவதாகவும் அமையும். இந்தியாவில் இருப்பவனாகவோ அல்லது பாகிஸ்தானில் இருப்பவனாகவோ இதைக் கூறவில்லை.காஷ்மீரில் வசிப்பவனாக இதைக் கூறுகிறேன்’ என்று ஒரு செய்திநேரப் பேட்டியில் பேசியிருந்தார். பேச்சுவார்த்தைகளால் தீர்க்க முடியாததை துப்பாக்கிகள் நிச்சயம் தீர்க்க முடியாது என்று அண்மையில் தனது ட்வீட் ஒன்றில் கூட பதிவு செய்திருந்தார். 

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பத்திரிகை உலகில் இருக்கும் சுஜாத்துக்கு பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சில தீவிரவாத அமைப்புகளால் தொடர்ந்து உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது. அதற்காகவே அவருக்கு ஐந்து தனிப்பாதுகாவலர்கள் இருந்ததாகக் கூறுகிறார் காஷ்மீரின் காவல்துறை இயக்குநர். இத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறிதான் தற்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். 2006ல் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் திடீரெனக் கடத்தப்பட்ட சுஜாத் துப்பாக்கி முனையில் இருந்து விநாடி நேரங்களில் உயிர்பிழைத்தார். அதிர்ஷ்டவசமாக துப்பாக்கியில் குண்டு அடைத்துப் போய்விடவே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவர் கடத்தல்காரனிடமிருந்து தப்பித்து வந்ததாகக் கூறுகிறார்கள் அவரது நண்பர்கள்.

சுஜாத் மரணம் குறித்து தங்களது வருத்தத்தைப் பதிவு செய்யும் அவரது பத்திரிகையாளர் நண்பர்கள், “சுஜாத் அரசு சார்ந்தவராகவோ அல்லது பிரிவினைவாதிகளைச் சார்ந்தவராகவோ இல்லை, அவர் பிரச்னைகளையும் அதன் தீர்வுகளைச் சார்ந்தவராகவும் மட்டுமே இருந்தார். இப்படியான மனிதர் துப்பாக்கித் தாக்குதலுக்கு பலியாவது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதான் ஆனால் காஷ்மீரில் கட்சியில் இருக்கும் சாதாரண மனிதர்களுக்கெல்லாம் 'இசெட்’ பிரிவுப் பாதுகாப்பு இருக்கும்போது சுஜாத் போன்ற பாதுகாக்கப்படவேண்டியவர்களுக்கு அரசு இப்படியான பலத்த பாதுகாப்பை அளித்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் மெஹபூபா முஃப்தி தற்போது கண்ணீருடன் தனது வருத்தத்தைப் பதிவு செய்திருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது” என்கின்றனர். 

சுஜாத்தின் பயணமும் கொள்கையும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. இந்தியாவுக்கான காஷ்மீரா? பாகிஸ்தானுக்கான காஷ்மீரா? என்று எந்தப் பக்கமும் அவர் சாயவில்லை. அவர் தேர்ந்தெடுத்த பாதை இரண்டுக்கும் இடைப்பட்டு இருந்தது, காஷ்மீரில் அமைதி.

இறப்பினும் அறம் வெல்லும் அஞ்சற்க!

மூலக்கதை