செர்பியாவின் செம்ம மிட்ஃபீல்டு... கோஸ்டாரிகாவைப் பந்தாடிய கொலரோவ்...#CRCSRB

விகடன்  விகடன்
செர்பியாவின் செம்ம மிட்ஃபீல்டு... கோஸ்டாரிகாவைப் பந்தாடிய கொலரோவ்...#CRCSRB

பலரும்  செர்பியா, ரஷியாவில் இருக்கிறது என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்போது எல்லோருமே தேடியிருப்பார்கள் யார் இந்த செர்பியர்கள் என்று. யார் கொலாரோவ் என்று... நேற்று வரை மெஸ்ஸியால் கூட இப்படி ஒரு ஃப்ரீ கிக் அடிக்க முடியவில்லை... அதெல்லாம் ரொனால்டோவுக்கு மட்டும் தெரிந்த கலை என்பதுபோல பேசிய வாய்களை எல்லாம் அடைத்துவிட்டார் கொலாரோவ். இப்போது செர்பியாவை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். டெமாக்ரசி தோன்றி பலநூறு ஆண்டு கடந்தும் செர்பியாவுக்குச் சுதந்திரம் 10 ஆண்டுகளுக்கு முன்தான் கிடைத்தது என்பதும் தெரிந்திருக்கும். கால்பந்து வெறும் விளையாட்டு மட்டுமல்ல. நேற்று, Group E-யில் முதல் ஆட்டமான கோஸ்டரிகா- செர்பியா அணிகளுக்கு இடையேயான மேட்ச் எப்படி இருந்தது என்று பார்ப்போம். 

இதுவரையில் விளையாடிய நான்கு உலகக் கோப்பை தொடக்கப் போட்டிகளில் 3-ல் வெற்றி என்ற பெருமிதத்தோடு இறங்கியது கோஸ்டரிகா. இன்னொரு முனையில் இதுவரை விளையாடிய 6 உலகக் கோப்பை போட்டிகளில் 5-ல் தோல்வி என்ற கணக்கோடு களமிறங்கியது செர்பியா. ஆட்டம் தொடங்கியது முதல், இரண்டு டீமும் அட்டாக், டிஃபெண்ட் என சமமாகவே விளையாடிவந்தன. 26-வது நிமிடம், கொலாரோவ் ஸ்டார்ட் லைன் அருகே இருந்து பாலை பெனால்ட்டி பாக்ஸ் வரை பாஸ் கொடுக்க, அந்த பாஸை முன்வரிசை வீரர் மிளின்கோவிச் சாவிச் அழகாக வாங்கியிருந்தாலும், அதைக் கோலாக மாற்றமுடியவில்லை. பந்தை சுலபமாகத் தடுத்துவிட்டார் கீப்பர் கீலோர் நவாஸ். 

42-வது நிமிடம் இன்னொரு அட்டாக். பைசைக்கிள் கிக்கெல்லாம் அடித்தார் சாவிச். அது ஆஃப் சைடாகப் போக முதல் பாதி முடிவுக்கு வந்தது. இரண்டு பக்கமுமே கோல் இல்லை. இரண்டாம் பாதி ஆரம்பித்து முதல் செர்பியாவின் ஆதிக்கம்தான் அதிகம். 49-வது நிமிடம் இன்னொரு அட்டாக். மிட்ரோவிச் இம்முறையும் கோல் அடிக்கவில்லை. 7 நிமிடத்தில் மீண்டும் இன்னொரு அட்டாக். இம்முறை பெனால்ட்டி பாக்ஸுக்கு வெளியே பந்தை தடுத்துவிட்டார்கள். ரெஃப்ரீ ஃபவுல் கொடுக்க. மெஸ்ஸி ஐஸ்லாந்து உடன் நின்று ஃப்ரீகிக் எடுத்த அதே இடத்தில் பந்தை வைத்துவிட்டு நின்றார் செர்பியாவின் அனுபவம் வாய்ந்த டிஃபென்டர். உலகின் சிறந்த பிளேயர் என்று பெயர்பெற்ற மெஸ்ஸியால் கோல் போடமுடியவில்லை. ஆனால், கிடைத்த வாய்ப்பைக் கோலாக மாற்றினார் அலெக்ஸாண்டர் கொலாரோவ். டார்கெட்டைப் பார்த்து, ஒருமுகப்படுத்தி ஒரு பெர்ஃபக்ட் ஷாட். கீலர் நவாஸால் தடுக்க முடியவில்லை. எங்கேயோ போகவேண்டிய பந்து வளைந்து கோல்போஸ்டின் டாப் கார்னரில் விழுந்து கோலான போது, கூடியிருந்த சின்ன செர்பியா ரசிகர் கூட்டம் கொண்டாடித் தீர்த்தது. 

ஃப்ரீகிக் சீஸன் என்பதுபோல, உலகக் கோப்பை ஆரம்பித்து இது மூன்றாவது ஃப்ரீகிக் கோல். பல சான்ஸ்களை ஃபார்வர்டு பிளேயர் மிட்டேராவிச் மிஸ் செய்ய கிடைத்த ஒரு சான்ஸை கோலாக்கி கேப்டனாக டீமை முன்னிலைக்குக் கொண்டு சென்றார் கொலாரோவ். செர்பியா 1, கோஸ்டரிகா 0. கோஸ்டரிகாவால் கடைசிவரை கோல் அடிக்க முடியவில்லை. தன்னை விட பலம்வாய்ந்த ஒரு அணியைத் தோற்கடித்துவிட்டது செர்பியா. இந்த உந்துதல், செர்பியாவை ரவுண்ட் ஆஃப் 16-க்குக் கொண்டுபோனாலும் போகலாம். நேற்று இரவு நடந்த பிரேசில் - ஸ்விட்சர்லாந்து மோதிய ஆட்டம் டிராவில் முடிந்ததால், இப்போதைக்குச் செர்பியாதான் குரூப்-E யில் முன்னிலையில் உள்ளது. இப்படி ஒரு ஃப்ரீகிக்கை அடித்து இனி ஃப்ரீகிக் கிடைத்தாலே கோல் விழுமா என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துவிட்டீர்கள். ஃப்ரீ கிக் எடுக்கப்போகும் எல்லோருக்குமே இனி ஒரு பிரஷர் இருக்கும். கோல் போடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கும். நன்றி கொலாரோவ்!

மூலக்கதை