க்ரீஸ்மான், போக்பா மட்டுமில்லை... பிரான்ஸின் வெற்றிக்கு தொழில்நுட்பமும் காரணம்..! #FRAAUS

விகடன்  விகடன்
க்ரீஸ்மான், போக்பா மட்டுமில்லை... பிரான்ஸின் வெற்றிக்கு தொழில்நுட்பமும் காரணம்..! #FRAAUS

88 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் பதிவு நிச்சயம் பதிவுசெய்யப்படும் ஆட்டம் இது. விக்கிப்பீடியா பதிவுகளில் முதல் பத்தியிலேயே இடம்பிடிக்கும் அளவு முக்கியமானது நேற்று நடைபெற்ற ஃபிரான்ஸ்-ஆஸ்திரேலியா ஆட்டம்.  இந்த வரலாறு ஃபிரான்ஸின் அட்டாக்குகாகவும், ஆஸ்திரேலியாவின் டிஃபென்ஸுக்காகவும் இல்லை. கால்பந்து உலகில் ரீப்பிளே செய்துபார்த்து பெனால்டி கொடுத்த முதல் ஆட்டம் என்பதால். 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் ஃபிரான்ஸ் ஆஸ்திரேலியாவை ஜெயித்ததற்கு உதவியது கிரீஸ்மேன், போக்பா மற்றும் நவீன டெக்னாலஜி. 

ஆட்டம் ஆரம்பித்தது முதல் நிமிடத்திலேயே அட்டாக்செய்து ஆஸ்திரேலியாவின் டிஃபென்ஸை திக்குமுக்காட வைத்தது ஃபிரான்ஸ். உலகக் கோப்பையின் இளம் வீரரான 19 வயது எம்பேப்பேவை ஈஸியாக ஹேண்டில் செய்துவிடலாம் என்று நினைத்த ஆஸ்திரேலியா டிஃபென்டர்களிடம் இருந்து முதல் நிமிடத்திலேயே பந்தை பிடுங்கி கோல் போஸ்ட்டை நோக்கி அடித்தார் எம்பேப்பே. ஆஃப் டார்கெட்டாகிவிட்டது. ஆட்டம் தொடங்கிய முதல் 8 நிமிடத்தில் 4 அட்டாக்குகள். ஆனால், ஒன்று கூட கோல் இல்லை. கடைசியாக ஃபிரான்ஸ் விளையாடிய 9 உலகக் கோப்பையிலும் இரண்டே முறைதான் குரூப் ஸ்டேஜில் முதலிடம் பிடித்தது. பயமும், கவனமும் இருக்கத்தானே செய்யும். ஃபிரான்ஸின் அட்டாக்குகள் அதிகரிக்க 13-வது நிமிடம் ஆஸ்திரேலியா டிஃபென்டர் மேத்தியூ லெக்கிக்கு முதல் யெல்லோ கார்டு கொடுத்தார் ரெஃப்ரி. 45 நிமிடத்துக்குள் 16 ஃபவுள். ஆஸ்திரேலியா தனது மொத்த பவரையும் டிஃபன்டிங்கிலேயே செலவழித்தது. அட்டாக்குகளுக்கு முயற்சிக்கவே இல்லை. முதல் பாதியில் எதுவுமே நடக்கலையே என்று வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு இரண்டாம் பாதியில்தான் ஆட்டமே காத்திருந்தது. 

54-வது நிமிடம், அட்டாக் முயற்சித்த ஆஸ்திரேலியாவிடம் இருந்து பந்தைவாங்கிய கான்ட்டே, போக்பாவுக்கு பாஸ் செய்ய, போக்பா முன்வரிசையில் கோல்போஸ்ட்டை நோக்கி ஓடிய கிரீஸ்மேனுக்கு கொடுக்க, பின்பக்க இருந்து பந்தை வாங்க ஸ்லைட் டேக்கில் செய்தார் ஜோஷ் ரிஸ்டன். கிரீஸ்மேன் விழுந்துவிட்டு பெனால்ட்டி கேட்க ரெஃப்ரீ முடியாது முடியாது என்று தலையை ஆட்டிவிட்டுச் சென்றார். பழைய உலகக் கோப்பை என்றால் எழுந்து ஆட்டத்தை தொடர்வதை தவிர வேறுவழியில்லை. ஆனால், இது 2018 உலகக் கோப்பையாச்சே. டிசிஷன் தவறானது என ரெஃபிரி குன்ஹாவின் காதுகளில் சொல்லியிருப்பார்கள் போல. சட்டென விசில் அடித்து கேமை நிறுத்தி V.A.R பெட்டியைப் பார்க்க சென்றார் ரெஃப்ரீ. 2 நிமிடத்தில் ரீப்ளே போட்டு யார் மீது தவறு என்று கண்டுபிடித்துவிட்டார். வேண்டுமென்றே கிரீஸ்மானின் கால்களை ரிஸ்டன் தட்டிவிட்டார் என்பது தெரியவர, பெனல்ட்டியோடு சேர்த்து ரிஸ்டனுக்கு யெல்லோ கார்ட்டையும் கொடுத்துவிட்டார் ரெஃப்ரீ. 

58-வது நிமிடம் பெனால்ட்டி வாய்ப்பில் ஃபிரான்ஸ் முதல் கோலை அடித்தது. கிரீஸ்மேனின் முதல் உலகக் கோப்பை கோல். இதுவரை 6 முறை உலகக் கோப்பையில் ஆடியிருந்தாலும், இதுதான் கிரீஸ்மேனின் முதல் கோல். ஃபிரான்ஸ் முதல் கோலின் சந்தோஷத்தில் இருக்க ஆஸ்திரேலியா மீண்டும் அட்டாக் முயற்சித்தது. இம்முறையும் எதுவும் பலிக்கவில்லை என்றாலும், பந்து உமிட்டியில் கையில் பட்டுவிட்டது. ஆஸ்திரேலியாவுக்கும் ஒரு பெனால்ட்டி வாய்ப்பு. கிரீஸ்மேன் போலவே செம்ம கூலாக பெனால்ட்டியை கோலாக மாற்றினார் கேப்டன் மைல் ஜெடினாக். இவரும் கேப்டன் கூல்தான் போல. வெறும் 4 நிமிட இடைவெளியில் இரண்டு பெனால்ட்டி. ஆட்டம் 1-1 என டிராவில் இருக்க டைடர் டெஸ்சாம்ப்ஸின் யோசித்து முடிவெடுத்திருக்கலாம் போல என தோன்றும் அளவு ஒரு முடிவை எடுத்தார். 

70-வது நிமிடம் நன்றாக விளையாடிக்கொண்டிருந்த கிரீஸ்மேனை தூக்கிவிட்டு ஆலிவர் ஜிரோடை களத்தில் இறக்கிவிட்டார் மேனேஜர் டைடர் டெஸ்சாம்ப்ஸ். முதல் உலகக் கோப்பை கோலை அடித்திருந்தாலும், இறுக்கமான முகத்தோடு ஃபீல்டை விட்டு வெளியேறிய கிரீஸ்மேனை பார்க்க, என்ன முடிவு இது என்று கடுப்பாகிய ரசிகர்களே ஆரவாரப்படுத்தி கிரீஸ்மேனை வழியனுப்பிவைத்தார்கள். தடுப்பாட்டத்திலேயே மேட்சை முடக்கிவிடலாம் என்று கனவு கண்டாலும் ஆஸ்திரேலியாவால் ரொம்பநேரத்துக்கு டிஃபென்ட் மட்டுமே விளையாட முடியவில்லை. 80-வது நிமிடம் போக்பா ரூபத்தில் வந்திறங்கியது இடி. இன்னொரு கோல். ஃப்ரீ கிக், பெனால்ட் ரகளையெல்லாம் இல்லை. போக்பாவே ஆரம்பித்து போக்பாவே முடித்து வைத்த கோல். போக்பா எம்பேப்பேவுக்கு பாஸ் கொடுக்க, எம்பேப்பே ஜிரோடுக்கு கொடுக்க முன் சென்று பந்தை ஜிரோடிடம் இருந்து வாங்கி கோல் அடிக்கக் கம்பத்தில் பட்டுத் தெறித்து மீண்டும் கம்பத்துக்குள்ளேயே கோலாக விழுந்தது பந்து. பந்து போஸ்ட் உள்ளே விழவில்லை என்று கோல்கீப்பர் சொல்ல, இம்முறை கோலை உறுதி செய்தது லைன் டெக்னாலஜி.

2018 உலகக் கோப்பை தொடங்கியது முதல், இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில், பெர்ஃபக்ட் காம்பினேஷனில் விழுந்த முதல் கோல் இதுதான். போக்பாவின் பெர்ஃபெக்ட் கோலில் இருந்து ஆஸ்திரேலியா மீண்டுவரவேயில்லை. ஃபிரான்ஸ் 3 பாயின்ட்டை வென்றுவிட்டது. ஆனால், அசத்தலான தடுப்பாட்டத்தை காண்பித்து ரவுண்ட் ஆஃப் 16 சென்றுவிடுவார்களா என்று யோசிக்கவைத்துவிட்டது ஆஸ்திரேலியா. நேற்றைய ஆட்டத்தில் வென்றது என்னவோ ஃபிரான்ஸாக இருந்தாலும், க்ரெடிட் டெக்னாலஜிக்குதான். அடுத்த போட்டியில் ஃபிரான்ஸ் 21-ம் தேதி பெருவுடனும், அதே நாள் ஆஸ்திரேலியா டென்மார்க் உடனும் மோதுகிறார்கள். நேற்று நடந்த பரபரப்பான் அர்ஜென்டினா மேட்சை பற்றி இந்த லிங்கில் படிக்கவும்...

மூலக்கதை