``இது அம்மா அரசுன்னா, எஸ்.வி.சேகரை கைது செய்யணும்!” அ.தி.மு.கவிலிருந்து ஒரு குரல்

விகடன்  விகடன்
``இது அம்மா அரசுன்னா, எஸ்.வி.சேகரை கைது செய்யணும்!” அ.தி.மு.கவிலிருந்து ஒரு குரல்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்தை தன் முகநூலில் பதிவு செய்த எஸ்.வி.சேகர்மீது பத்திரிகையாளர்கள் பலர் சென்னை மாநகர போலீஸ் ஆணையரிடம் புகார் தந்தனர். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். முன்ஜாமீனுக்காக உச்சநீதிமன்றம் வரை சென்றார், எஸ்.வி.சேகர்.  ஆனால், அவரை கைது செய்ய தடையில்லை எனச் சொன்னது உச்சநீதிமன்றம். `கட்சி அவர்மீது நடவடிக்கை எடுத்துவிட்டது' என்றபடி நழுவிக்கொள்கிறார், அவர் சார்ந்த பி.ஜே.பி.யின் தலைவர் தமிழிசை. உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை நிராகரித்த பின்னரும் தமிழ்நாடு போலீஸ் கைது செய்ய தயங்குவதற்கு, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவரது உறவினர் என்பதுதான் காரணம் என்று பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளரும் திரைப்பட இயக்குநரும், எஸ்.வி.சேகருடன் பழகியவருமான நாஞ்சில் பி.சி. அன்பழகன் அவர்களிடம் இதுகுறித்துப் பேசினோம்.

``சட்டம் தன் கடமையைச் செய்யும். அவர் நிச்சயம் கைதாவார். அதுக்கு முன் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பரப்பியவர் எப்படிப்பட்டவர் என்பதை என் அனுபவத்துல ஓர் உதாரணம் சொல்றேன். முரளி, லைலா நடித்து நான் இயக்கிய `காமராசு' படத்துல வடிவேலுவுக்குப் பதிலா முதல்ல எஸ்.வி.சேகரைத்தான் கமிட் பண்ணியிருந்தேன். சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவருக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு நினைச்சேன். நாகர்கோவில்ல ஷூட்டிங் போன இடத்துல அவர் செய்த சேட்டைகள் வெளியில் சொல்ல முடியாதவை. ஒரு கட்டத்துல கடுப்பாகித்தான் அவருக்குப் பதில் அந்தக் கேரக்டருக்கு வடிவேலுவை புக் செய்தேன்.

இது அம்மா ஜெயலலிதா ஆசியில நடக்கிற ஆட்சி. தப்பு செஞ்சவங்க யாரா இருந்தாலும் எவ்ளோ பெரிய இடத்துல இருந்தாலும், தூக்கி வீசப்படுவாங்க. அப்படிப்பட்டவருக்கு எதுக்கு நாங்க முட்டுக் கொடுக்கணும்? அவரைக் கைது செய்யாததால அரசுக்கு உண்டாகியிருக்கும் அவப்பெயரைத் துடைக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுங்கட்சி ஆளா சொல்றேன், நிச்சயம் அவர் கைது செய்யப்படுவார்!'' என்றவரிடம், சில கேள்விகளை வைத்தோம்.

``திரைத்துறையிலிருந்து அரசை விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறதே?”

``அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா எல்லோரும் சினிமாவுல இருந்து முதல்வர் ஆனவங்க. அதனால, சினிமா பிரபலமா இருந்தா அவங்களை மாதிரி நாமளும் சி.எம் சீட்ல உட்கார்ந்திடலாம்னு இவங்களுக்கு ஆசை, கனவு. அந்த ஆசையிலதான் நண்டு சிண்டு நடிகர்கள் எல்லாம் இன்னைக்குப் பேசுறாங்க. மேற்படி தலைவர்கள்லாம் நாலு படத்துல நடிச்சு வசனம் பேசிட்டு, நேரடியா சி.எம் சீட்ல உட்கார்ந்தமாதிரி நினைச்சிட்டு இருக்காங்க.

இப்போ நண்டு சிண்டு நடிகர்கள் முதல்வராகத் துடிக்கிறாங்க. இவங்க ஒரேயொரு தேர்தலைச் சந்திக்கட்டும், அவங்க ஓடுறதைக் கண்டு, மொத்தக் கூட்டமும் தலைதெறிக்க ஓடும்." 

``ரஜினி, கமல் அரசியல் வருகையைக் கண்டு அ.தி.மு.க பதறுவது ஏன்?”

``அம்மா மரணத்துக்குப் பிறகு, `அதிமுக மூணு மாசத்துக்குத் தாக்குப் பிடிக்காது’னு சொன்னாங்க. இப்போ அந்த அம்மா உருவாக்கித் தந்த ஆட்சிதானே நடந்துக்கிட்டு இருக்கு? பெருவாரியான உறுப்பினர்களை வெச்சிருக்கிற தி.மு.க வே சட்டசபைக்கு வர பயந்து புறக்கணிக்கிறோம்னு சொல்லிக்கிட்டிருக்காங்க. அப்படி இருக்கும்போது எங்களுக்கு ரஜினி, கமல் அரசியல்தான் பிரச்னையா? அரசியல்ல ரஜினி கமல் ரெண்டுபேரும் பிளே ஸ்கூல் ஸ்டூடன்ட்ஸ். அ.தி.மு.க எதுக்கு இவங்களைக் கண்டு பயப்படணும்?''

 

 

மூலக்கதை